கரூர் மாவட்டம், தாந்தோணி ரயில்வே கேட் வடக்கு பகுதியில் கரூர் – திண்டுக்கல் செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் இரும்பு துண்டு வைத்துள்ளனர். கோவையிலிருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் வண்டி எண் 13622 ரயிலானது கரூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சம்பந்தபட்ட இடத்தில் இன்று பிற்பகல் 11.41 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது, ரயில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்பு துண்டின் மீது ரயில் இன்ஜின் ஏறி கடந்து செல்லும் போது, ரயில் இன்ஜினின் முன் சக்கரத்தில் சத்தம் கேட்டுள்ளது.
அதனால் ஓட்டுநர் வெள்ளியணை ரயில்வே ஸ்டேஷனில் 11.50 மணிக்கு நிறுத்திவிட்டு, கரூர் ரயில்வே போலீசருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், ரயில்வே ஊழியர்கள் மற்றும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு தண்டவாளத்தில் ஏற்பட்ட சிறு சேதாரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து, வெள்ளியணை ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்ட கோயமுத்தூர் – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் மாற்று எஞ்சின் பொருத்திய பிறகு சுமார் 1.05 மணிக்கு நாகர்கோவிலுக்கு புறப்பட்டு சென்றது. தண்டவாளத்தில் இரும்பு துண்டு வைத்து ரயிலை கவிழ்க்க சரி செய்துள்ளனரா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.