Skip to content
Home » மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஒரு வாரம் கெடு

மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஒரு வாரம் கெடு

தமிழ்நாடு அரசுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறார். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இரண்டு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், ‘‘தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பும் சட்ட மசோதக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே குறிப்பிட்ட கால வரம்புக்குள் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும், அதேப்போன்று துணை வேந்தர்கள் நியமனத்திலும் ஆளுநர் ஆர்.என்.ரவி தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டது.

வழக்கை முன்னதாக விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநர் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கட்டுப்பட்டவர். குறிப்பாக மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரம் உட்பட அனைத்திலும் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நினைக்கிறாரா என்று கண்டனத்தோடு கேள்வி எழுப்பி வழக்கின் விசாரணையை ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தரப்பில் டந்த இரு தினங்களுக்கு முன்னதாக ஒரு புதிய மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில்,‘‘அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்களின் பதவி காலம் கடந்த ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களில் முடிவுக்கு வந்துள்ளது. பாரதிதாசன் மற்றும் பெரியார் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களின் பணி நீட்டிப்புக் காலமும் வரும் பிப்ரவரி மற்றும் மே மாதங்களுடன் நிறைவுக்கு வருகிறது. இந்த பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு தேடுதல் குழுவை அமைத்துள்ளது. ஆனால் ஏற்கனவே செய்தது போலவே பல்கலைக்கழக மானிய குழுவின் உறுப்பினரை இந்த குழுவில் சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் வலியுறுத்தி உள்ளார். ஏற்கனவே இதே விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் பொழுது மீண்டும் தமிழ்நாடு ஆளுநரின் இந்த அறிவுறுத்தல் விதிமுறைகளுக்கு எதிரானது ஆகும். எனவே இந்த விவகாரத்தில் மூல வழக்கை விசாரிக்கும் பொழுது இந்த புதிய தகவல்களையும் கருத்தில் கொண்டு உரிய விதமான கூடுதல் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அமர்வில் நடைபெற்றது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி, ‘‘தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்பான வழக்கு விவகாரத்தில் இருக்கும் நிலவரத்தை அறிந்து பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்கிறோம். எனவே விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் கூடுதல் முன்னேற்றங்கள் உள்ளது. அதனையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஆர்.மகாதேவன் ‘‘தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளதா அல்லது பழைய நிலையே தொடருகிறதா என்று கேள்வியெழுப்பினார். தொடர்ந்து தமிழ்நாடு அரசு தப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன் மற்றும் சபரீஸ் சுப்ரமணியன் ஆகியோர் வாதத்தில், ‘‘தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி இடையேயான மோதல் போக்கு என்பது பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து நீடித்துக் கொண்டுதான் வருகிறது. இதுவரை முடிவுக்கு வரவில்லை. குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் ஆளுநர் எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. முக்கிய மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருகிறார். இதனால் மக்களுக்கான முக்கிய திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் உள்ளது. குறிப்பாக தற்போது துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான பிரச்னையும் எழுந்துள்ளது. துணை வேந்தர்களை நியமனம் செய்யும் விவகாரத்திலும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் தலையீடு உள்ளது. இதுகுறித்த புதிய கூடுதல் ரிட் மனுவும் தற்போது உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்வான உத்தரவை விரைந்து பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘இந்த வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கிறோம். அதற்குள் மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் தரப்பில் இருந்து இந்த விவகாரத்தில் ஒரு தீர்வை காண வேண்டும். இல்லை என்றால், வழக்கை நாங்களே விசாரித்து இறுதியாக தீர்த்து வைப்போம். எனவே இதுகுறித்து மத்திய அரசு உடனடியாக நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டனர். இதையடுத்து தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு இறுதி விசாரணைக்காக வரும் வாரம் உச்ச நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட உள்ளது.