பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சேவல் சண்டை நடப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களாக அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், சேவல் சண்டை நடக்கும் இடங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்நிலையில் அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையம், க.பரமத்தி, தென்னிலை, வெள்ளியணை சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்காங்கே சட்டவிரோதமாக சேவல் சண்டை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அரவக்குறிச்சி போலீசார் ரோந்து
பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இனுங்கனூரில் சட்டவிரோதமாக சேவல் சண்டை நடப்பது உறுதி செய்யப்பட்டது. இனுங்கனூர் பகுதியைச் சேர்ந்த ரகு என்பவரது தோட்டத்தில் சேவல் சண்டையில் ஈடுபட்ட ரகு, நவீன் குமார், விஜயகுமார், அருண்குமார், செல்லத்துரை, செந்தில்குமார், மணி, செல்வ பிரகாஷ், மதன்குமார், ரமேஷ், நாச்சிமுத்து, செல்லமுத்து, கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
குறிப்பாக அரவக்குறிச்சி பகுதியில் 16 பேர் மீதும், வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் 7 பேர் மீதும் , வெள்ளியணை பகுதியில் 3 பேர் என மொத்தம் 26 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்து பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
மேலும், சட்டவிரோதமாக சேவல் சண்டைக்கு பயன்படுத்திய 10 சேவல்கள், சேவல் சண்டைக்கு பயன்படுத்திய கத்திகள், 6 டூவீலர், ரூ. 37,000 ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.