தஞ்சை பிருந்தாவனம் கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் வேதகுமார். இவர் மலேசியாவில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கற்பகம். இவர்களுக்கு புவனேஷ்வரி(வயது 17), சுஷ்மிதா(14) என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில் புவனேஷ்வரி தஞ்சையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-2 கணினி வணிகம் படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் வீட்டில் உள்ளவர்களிடம் சிவகங்கை பூங்கா அருகே வசிக்கும் தனது தோழி ஒருவரை பார்க்க செல்வதாக கூறி ஸ்கூட்டரில் புறப்பட்டார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் புவனேஷ்வரியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அவரது செல்போன் நீண்ட நேரமாக சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் புவனேஷ்வரியை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் புவனேஷ்வரி செல்கின்ற அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. பின்னர் இது குறித்து புவனேஷ்வரியின் சித்தப்பா ஆனந்த் தஞ்சை கள்ளம்பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தாா்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் புவனேஷ்வரியை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் தஞ்சை – கும்பகோணம் புறவழிச்சாலையில் உள்ள வெண்ணாற்றங்கரையில் நேற்று 17 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரின் பிணம் கரை ஒதுங்கியுள்ளதாக தஞ்சை கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் இறந்து கிடந்த சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீசார், இறந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்தவர் காணமல் போன புவனேஷ்வரி என்ற சிறுமி என்பது தெரியவந்தது. இதையடுத்து புவனேஷ்வரியின் பெற்றோருக்கு புவனேஷ்வரி இறந்த தகவலை தெரிவித்தனர். மேலும் இது குறித்து கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து புவனேஷ்வரி ஆற்றில் தற்கொலை செய்து கொண்டு இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியினரியையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது