Skip to content
Home » போலி ஆவணம்: சார் பதிவாளர் உள்பட 7 பேர் மீது வழக்கு, திருச்சி விஜிலென்ஸ் அதிரடி

போலி ஆவணம்: சார் பதிவாளர் உள்பட 7 பேர் மீது வழக்கு, திருச்சி விஜிலென்ஸ் அதிரடி

திருச்சி  சார் பதிவாளராக இருந்தவர்   முரளி (52).  இவர்  கடந்த 31.08.2021 முதல் 5.7.2023 வரை இந்த  பொறுப்பில் இருந்துள்ளார்.  இவரது பணி காலத்தில்   ஸ்ரீரங்கம் வட்டத்தில் உள்ள அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கு, வட்டார வளர்ச்சி அலுவலரால், மனை வரன்முறை கோரி வரும் மனுதாரர்களின் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, மனுதாரர்களிடம் இருந்து கூராய்வு கட்டணம், வரன்முறை கட்டணம், வளர்ச்சி கட்டணம் ஆகியவற்றை பெற்றுக்கொண்டு மனைகள் வரன்முறை செய்து, அரசு உத்தரவுப்படி வட்டார வளர்ச்சி அலுவலரால் செயல்முறை ஆணைகள் பிறப்பிக்கப்பட்ட மனைகளுக்கு பத்திரப்பதிவு செய்யப்பட வேண்டும் என சார்பதிவு அலுவலகங்களுக்கு சுற்றிக்கை அனுப்பப் பட்டுள்ளது.

அப்போது முகமது சலீம் என்பவருக்கு சொந்தமான கம்பரசம்பேட்டை கிராமத்தில் உள்ள 4,730 சதுரஅடிகொண்ட சொத்தில் 630 சதுர அடி கொண்ட காலிமனைக்கு அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரால் வரன்முறை கட்டணம் மற்றும் வளர்ச்சி கட்டணம் செலுத்தாமலேயே, செலுத்தியதாக போலியாக ஆவணம் தயார் செய்து, இணை சார்பதிவகத்தில் கோபி என்பவருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் வரன்முறை கட்டணம் ரூ.2,655 மற்றும் வளர்ச்சி கட்டணம் ரூ.1,475 ஆக கூடுதல் ரூ.4,130 மதிப்பில் அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல, சையது அமானுல்லாவிற்கு சொந்தமான கம்பரசம்பேட்டை கிராமத்தில் 9,997.02 சதுர அடி கொண்ட சொத்தில் 1,321 சதுர அடி கொண்ட காலிமனைக்கு அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரின் ஆவணங்களை போலியாக பயன்படுத்தி, பரமசிவம் என்பவருக்கு பத்திரப்பதிவு செய்யப் பட்டுள்ளன.

இதன் மூலம் வரன்முறை கட்டணம் ரூ.5850 மற்றும் வளர்ச்சி கட்டணம் ரூ.3250 ஆக கூடுதல் ரூ.9100 அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, கூட்டுச்சதி செய்து, அரசு முத்திரைகளைப் (ஸ்டாம்புகளை) போல, போலி முத்திரைகளை தயார் செய்து, போலி ஆவணங்களும் தயார் செய்து, அவற்றை உண்மையான ஆவணங்களை போல் பயன்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு  பிரிவு, டிஎஸ்பி மணிகண்டனுக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக தொடர்ந்து, நடத்திய விசாரணையில், சார் பதிவாளர் முரளி சிலருடன் சேர்ந்து அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதும், போலியான ஆவணங்கள் என்பது தெரிந்தும் பத்திரப்பதிவு செய்ததும் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து ஊழல் தடுப்பு பிரிவு துறை போலீசார், திருச்சி சார் பதிவாளர் முரளி, ஆவண எழுத்தர்கள் சக்திவேல், திருச்சி தென்னூரை சேர்ந்த சையது அமானுல்லா, மேல சிந்தாமணியை சேர்ந்த முகமது சலீம், பாலக்கரையைச் சேர்ந்த முகமது உவைஸ் உள்ளிட்ட 7 பேர் மீது, மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஜனவரி 10 ம் தேதி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் உள்பட 7 பேர் மீது ஊழல் தடுப்பு பிரிவு போலீசார்  வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில், இதுபோல திருச்சி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு பிரிவு மாவட்ட நியமன அலுவலர் மீது ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிந்துள்ள நிலையில் மேலும் ஒரு அரசு அலுவலர் மீது வழக்கு பதிவு செய்திருப்பது  திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.