Skip to content
Home » சென்னை எஸ்எஸ்ஐக்கள் குறித்த பரபரப்பு தகவல்கள்

சென்னை எஸ்எஸ்ஐக்கள் குறித்த பரபரப்பு தகவல்கள்

கடந்தாண்டு, டிசம்பர் 16ம் தேதி இரவு, திருப்பத்துாரில் இருந்து சென்னைக்கு 20 லட்சம் ரூபாயுடன் வந்த முகமது கவுஸ் என்பவரிடம் வழிப்பறி செய்தது தொடர்பாக, சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் எஸ்எஸ்ஐ ராஜா சிங் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த, சென்னை வருமான வரி அலுவலகத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளர் பிரபு(31), ஆய்வாளர் தாமோதரன்(41), ஊழியர் பிரதீப்(42) ஆகியோரும் கைதாகினர். இவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வழிபறி சம்பவத்தின் முக்கிய கூட்டாளியான, சென்னை சைதாப்பேட்டை போலீஸ் எஸ்எஸ்ஐ சன்னி லாய்டை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். அவர் உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் எஸ்எஸ்ஐ சன்னி லாய்டை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். முன்னதாக எஸ்எஸ்ஐக்கள் சன்னி லாய்டு, ராஜா சிங் ஆகியோரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். அதில் சென்னை பெரியமேடு, ராயபுரம், பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளைச் சுற்றியே பணிபுரிந்து வந்த இருவரும் வருமான வரி அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து, ஹவாலா பணப் பரிமாற்ற கும்பலை குறிவைத்து கோடிக்கணக்கில் வழிப்பறி செய்தது தெரியவந்தது. இதன் அடிப்படையில், எஸ்எஸ்ஐக்கள் சன்னி லாய்டு மற்றும் ராஜாசிங் இருவரும் பல இடங்களில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். இது குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் வாங்கி  குவித்த சொத்துக்களை பறிமுதல் செய்வது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் மாதமாதம் ஹவாலா கும்பல்களிடம் லட்சகணக்கில் மாமூல் வசூலித்து வந்த விபரமும் விசாரணையில் தெரியவந்துள்ளது.