அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணியும் செயல்படுகிறது. இரு அணியும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க கோரி, உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த மனு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், இன்று 6 பக்கம் கொண்ட விளக்கத்தை அளித்துள்ளது.
அதில், நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், கடந்தாண்டு ஜூலை 11ல் எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கவில்லை. இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் எந்த வழக்கும் தாக்கல் செய்யப்படவில்லை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவது என்பது தேர்தல் நடத்தும் அலுவலரின் முடிவுக்கு கட்டுப்பட்டது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த விளக்கம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.