திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மைக்கேல் பாளையம் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் கழுத்தறுபட்ட நிலையில் வாலிபரும், அவருக்கு அருகில் ஒரு பெண்ணும் பிணமாக கிடந்தனர். இதைப்பார்த்த அப்பகுதி விவசாயிகள் நிலக்கோட்டை போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வந்து பார்த்தபோது, கழுத்து அறுக்கப்பட்ட வாலிபரின் கையில் ரத்தக்கரை படிந்த கத்தியும், பெண்ணின் அருகில் பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில், தண்ணீர் பாட்டில், பூ மற்றும் உணவு பொட்டலங்கள் இருப்பதை போலீசார் பார்த்தனர். இதனால் இருவரும் தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இறந்து கிடந்தவர்கள், மைக்கேல்பாளையம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஜீவா (வயது 32) என்றும், அவருக்கு அருகில் பிணமாக கிடந்த பெண் அதே பகுதியை சேர்ந்த சகாயராஜ் மனைவி ஆலிசா (30) என்றும் தெரியவந்தது. ஆலிசா வீட்டருகே உள்ள தோட்டத்தில் ஜீவா கூலிவேலைக்கு சென்று வந்தார். அப்போது, அவருக்கும் ஜீவாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து உள்ளனர். இந்த விவகாரம் ஊர் முழுவதும் தெரிந்து விட்டது. இதனால் அவர்களுக்கு அவமானம் ஏற்பட்டது. 2 பேரும் அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டத்துக்கு சென்று தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஜீவா தனக்கு தானே கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துள்ளார்.
ஆலிசா பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்துள்ளார். ஆலிசாவுக்கு 13 வயதில் ஒரு மகன் இருக்கிறான். ஜீவாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கள்ளக்காதல் ஜோடி தற்கொலை திண்டுக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.