சென்னையில் பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் பிரபல ரவுடி பாம் சரவணன், இவரை சென்னை போலீசார் தேடி வந்த நிலையில் தலைமறைவானார். அவர் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் ஆந்திரா சென்று துப்பாக்கி முனையில் பாம் சரவணனை நேற்று கைது செய்தனர். பின்னர் சென்னை அழைத்து வரும்போது காவலர்களை தாக்கிவிட்டு தப்ப முயற்சித்துள்ளார். எம்.கே.பி. நகர் அருகே நாட்டு வெடிகுண்டுகளை வீசி தப்பி ஓட முயன்ற பாம் சரவணனை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
சென்னை ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்கு பழிவாங்க இவர் திட்டம் தீட்டியதாகவும் கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் காலில் காயம் அடைந்த ரவுடி பாம் சரவணனுக்கு சென்னை அரசு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாம் சரவணனிடம் இருந்து 4 நாட்டு வெடிகுண்டுகள், கத்தி, கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 6 கொலை வழக்குகள் உள்பட 33 வழக்குகளில் பிரபல ரவுடி பாம் சரவணன் தொடர்புடையவர். சரவணன் என்கிற பாம் சரவணன் “A ப்ளஸ்” ரவுடிகள் பட்டியலில் இருப்பவர்.
கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பரும் பகுஜன் சமாஜ் கட்சியின் வட சென்னை மாவட்ட செயலாளருமான தென்னரசு கடந்த 2016 ம் ஆண்டு, ஆற்காடு சுரேஷ் கும்பலால் கொலை செய்யப்பட்டார். அந்த தென்னரசுவின் சகோதரர்தான் இந்த பாம் சரவணன். தனது சகோதரர் கொலைக்கு பழிவாங்க ஆற்காடு சுரேஷை கடந்த 2023 ம் ஆண்டு கூட்டாளிகளோடு சேர்ந்து கொலை செய்ததாக இவர் மீது வழக்கு உள்ளது.
சென்னையைக் கலக்கிய பிரபல தாதா காது குத்து ரவி, குன்றத்தூர் வைரம், காக்கு வீரன் போன்றோரின் நெருங்கிய கூட்டாளியாக செயல்பட்டு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார். கொலை மற்றும் கொலை முயற்சிகளின் போது நாட்டு வெடிகுண்டுகளை வீசி காரியத்தை முடிப்பதில் இவர் கைதேர்ந்தவர் என்பதால் பாம் சரவணன் என ரவுடிகள் வட்டாரத்தில் அழைக்கப்பட்டு அதுவே பட்டப்பெயரானது. இதுவரை 5 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சரவணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.