ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 10ம் தேதி தொடங்கியது. விடுமுறை நாட்கள் தவிர்த்து 10, 13, 17ம் தேதி என 3 நாட்கள் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்யமுடியும் .அதன்படி, வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளான கடந்த 10ம் தேதி 3 சுயேட்சை வேட்பாளர்கள் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
2வது நாளான 13ம் தேதி மொத்தம் 6 பேர் மனு தாக்கல் செய்தனர். சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த சமூக சேவகர் ராஜசேகர் (67), மொடக்குறிச்சி தாலுகா, 46 புதூர், சஞ்சய் நகர் பகுதியை சேர்ந்த சமூக சேவகர் கோபாலகிருஷ்ணன் (31), தேர்தல் மன்னன் கஜினி முகமது என அழைக்கப்படும் ராமநாதபுரம் மாவட்டம், சோழந்தூர் பகுதியை சேர்ந்த பானை மணி (80), தர்மபுரி நகரப்பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ஆனந்த் (40), ஈரோடு, மரப்பாலம் பகுதியை சேர்ந்த வாசனை திரவிய வியாபாரி முகம்மது கைபில் (51), சென்னையில் பேப்பர் வியாபாரம் செய்யும், திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட இசக்கி முத்து (50) ஆகிய 5 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இவர்கள் தவிர, கடந்த 10ம் தேதி மனு தாக்கல் செய்த கோவையை சேர்ந்த நூர் முகம்மது கூடுதலாக ஒரு வேட்பு மனுவைவும் தாக்கல் செய்தார். எனவே 2ம் நாளில் மட்டும் மொத்தம் 6 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து கடந்த 10ம் தேதி மனு தாக்கல் செய்தவர்களுடன் சேர்த்து மொத்தம் 9 பேர், 10 மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
நாளை வேட்பு மனு தாக்கலுக்கான இறுதி நாள், எனவே நாளை திமுக வேட்பாளர் சந்திரகுமார் வேட்புமனு தாக்கல் செய்கிறார். நாதக வேட்பாளர் சீதாலட்சுமியும் நாளை தான் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
இதற்கிடையில் சந்திரகுமாரை ஆதரித்து அமைச்சா முத்துசாமி ஈரோடு நகரில் 2 நாள் வீதிவீதியாக சென்று ஆதரவு திரட்டினார்.
18ம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறுகிறது. 20ம் தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதைத்தொடர்ந்து பிப்ரவரி 5ம் தேதி வாக்குப்பதிவும், 8ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது.