தை மாதம் 3ம் நாள் காணும் பொங்கலாக தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் , மக்கள் குடும்பம், குடும்பமாக உறவினர்கள், நண்பர்களுடன் கடற்கரை, பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு மையங்களில் திரண்டு உற்சாகமாக பொழுதை கழிப்பது வழக்கம்.
அதன்படி இன்று காலையிலேயே திருச்சி முக்கொம்பு, கல்லணை, தஞ்சை பெரியகோவில், சிவகங்கை பூங்கா, பூம்புகார் உள்ளிட்ட சுற்றலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. காலையிலேயே மக்கள் குடும்பம் குடும்பமாக வரத் தொடங்கினர்.
சென்னையில் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா, தீவுத் திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, செம்மொழிப் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மெரினாவில் பல லட்சம் பேர் திரள்வார்கள் என்பதால் உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மெரினாவில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி யாராவது கடலில் இறங்கி மூழ்கினால் அவர்களை மீட்பதற்காக, நீச்சல் தெரிந்த 200 பேர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். சென்னை போலீஸ் மற்றும் கடலோர காவல் குழுமத்தின் கடற்கரை உயிர்காக்கும் பிரிவை சேர்ந்த 85 பேரும் பணியில் உள்ளனர்.
சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் பாதுகாப்பு, கண்காணிப்புப் பணியில் 16 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவியாக 1,500 ஊர்க்காவல் படையினரும் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
பெசன்ட் நகர் கடற்கரையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் தலா 4 ட்ரோன் கேமராக்கள் வீதம் மொத்தம் 8 ட்ரோன் கேமராக்கள் மூலம் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கூட்டத்தில் குழந்தைகள் காணாமல் போவதை தடுக்க, கடற்கரைக்கு வரும் குழந்தைகள் கைகளில், அவர்களது பெயர், பெற்றோரின் செல்போன் எண், முகவரி அடங்கிய பிரத்யேக பட்டை கட்டப்பட்டது.
பைக், கார் ரேஸை தடுக்கும் வகையில் கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து போலீஸார் சிறப்பு குழுக்களை அமைத்து கண்காணிக்க உள்ளனர். கடலோர காவல்படை: இந்திய கடலோர காவல்படையின் கப்பல்கள், ஹெலிகாப்டர்களும் மெரினா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் படுகின்றன. கடலில் பொதுமக்கள் சிக்கிக் கொண்டாலோ, வேறு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தாலோ, உடனடியாக மீட்பு பணியில் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்படும் என்று இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
காணும் பொங்கலை முன்னிட்டு மெரினா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று போக்குவரத்தில் போலீஸார் மாற்றம் செய்துள்ளனர். சென்னையில் மட்டும் காணும் பொங்கலையொட்டி பாதுகாப்பு பணியில் 16 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.