Skip to content
Home » அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : திமிறிய காளைகள்-மல்லுகட்டும் வீரர்கள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : திமிறிய காளைகள்-மல்லுகட்டும் வீரர்கள்

தமிழர் திருநாளாம் பொங்கல்  பண்டிகையையொட்டி  தமிழகத்தில்  பரவலாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தாலும்,  மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு  சிறப்பானது.   தை முதல்நாள்  அவனியாபுரத்திலும், 2ம் நாள்  பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள்  விறுவிறுப்பாக நடந்தது.

காணும் பொங்கல் தினமாக இன்று உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. போட்டியை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.  வணிகம் மற்றும் பத்திர பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ,தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர்  பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்  மற்றும் கலெக்டர் சங்கீதா, உதயநிதியின் மகன் இன்பநிதி  மற்றும்  எம்.பி, எம்.எல்.ஏக்களும்   நிகழ்ச்சியில்   கலந்து கொண்டனர்.

காளைகளை பிடிக்க வந்த  மாடுபிடி வீரர்கள் காலை 7.42 மணி அளவில் உறுதிமொழி ஏற்றனர். இதனை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. . இதன்பின்னர் போட்டிக்கான காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

மொத்தம் 1,100 காளைகள், 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கிறார்கள். போட்டியை காண நேற்று இரவு முதலே அலங்காநல்லூருக்கு  மக்கள் வரத் தொடங்கினர்.  முதல் சுற்று போட்டியில்  மஞ்சள்  சீருடை அணிந்த வீரர்கள் களம் கண்டனர்.

பெரும்பாலான காளைகள், காளையர்களின் வீரத்துக்கு சவால் விட்டன.   வந்து பார்,  தொட்டு பார் என  காளைகள்  கெத்து காட்டி  களமாடின. முதல் சுற்றை பொருத்தவரை சில காளைகள் மட்டுமே பிடிபட்டன.  தொடர்ந்து போட்டிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.  வெற்றி பெறும் வீரர்களுக்கு  துணை முதல்வர்  பரிசுகள் வழங்கி வருகிறார்.