மேற்காசிய நாடான பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேலுக்குள் புகுந்து, 2023ம் ஆண்டு, அக்., 7ல் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் இறந்தனர். நுாற்றுக்கணக்கான இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதையடுத்து துவங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போர், 15 மாதங்களாக நீடித்து வந்தது. காசாவில் 46,000 பேர் கொல்லப்பட்டனர். போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாடுகள் கடந்த சில மாதங்களாக முயற்சித்து வந்தன.காசாவில் 15 மாதங்களாக நீடித்து வரும் போரை நிறுத்த ஹமாஸ் – இஸ்ரேல் இடையே நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது: காசாவில் இதுவரை 46,000க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற 15 மாத காலப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஆறு வாரத்திற்கு போர் நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. காசாவில் இருந்து இஸ்ரேல் ராணுவத்தினரை முறையாக திரும்பப் பெறுவது மற்றும் அந்தந்த தரப்பினரால் பிணைக் கைதிகளை பரிமாறிக்கொள்வது ஆகியவை அடங்கும். போர் நிறுத்த ஒப்பந்தம் மூன்று கட்டங்களாக கட்டமைக்கப்பட்டுள்ளது. .ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தில் பிணைக் கைதிகளை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆறு வாரங்களில், இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்திற்கு பேச்சுவார்த்தை நடக்கும். இது போர் நிறுத்தத்திற்கான இறுதி முடிவு. இவ்வாறு ஜோ பைடன் கூறினார்.