Skip to content
Home » கெஜ்ரிவால் மீது வழக்கு தொடர EDக்கு மத்திய அரசு அனுமதி

கெஜ்ரிவால் மீது வழக்கு தொடர EDக்கு மத்திய அரசு அனுமதி

டில்லி யூனியன் பிரதேசத்தில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் ரூ.2,800 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைதாகி ஜாமீனில் உள்ளனர்.  சிறையிலிருந்து வெளிவந்த கெஜ்ரிவால், “என் மீதான குற்றச்சாட்டுகள் போலியானவை. இனி தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் தீர்ப்பால் குற்றச்சாட்டுகள் பொய் என நிரூபித்த பின்னர் மீண்டும் முதல்வர் பதவியில் அமர்வேன்.” என சூளுரைத்துள்ளார்.

கடந்த நவம்பர் 6-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி (சிஆர்பிசி), அரசின் முன் அனுமதி பெறாமல், அரசு ஊழியர் ஒருவரை பணமோசடி வழக்கின் கீழ் கைது செய்ய முடியாது என்று தெரிவித்திருந்தது. முன்பு, அரசு ஊழியர்களுக்கு எதிராக அமலாக்கத் துறை வழக்குத் தொடர்வதற்கு அரசின் அனுமதி தேவையில்லை. அவை சிபிஐ மற்றும் மாநில காவல் துறை போன்ற பிற விசாரணை அமைப்புகளுக்கே கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தத் தீர்ப்பின்படி கெஜ்ரிவால் மீது வழக்கு தொடர அனுமதி கோரி, துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு அமலாக்க துறை கடிதம் எழுதியிருந்தது. அவரும் அதற்கு ஒப்புதல் தெரிவித்திருந்தார்.

அடுத்த மாதம் 5-ம் தேதி  டில்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், டில்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்கு தொடர அமலாக்கத் துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. தேர்தல் களத்தில்   ஆம் ஆத்மியை வீழ்த்தி விட வேண்டும் என  இதுபோன்ற செயல்களில பாஜக ஈடுபட்டுள்ளதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டி உள்ளது.