மாதங்கள் தோறும் விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், தமிழ்நாட்டில் கிராமங்கள் முதல் மாநகரங்கள் வரை ஒட்டுமொத்தமாக கொண்டாடப்படும் விழா தைப்பொங்கல். இது தமிழர்களின் திருநாள், இயற்கைக்கு நன்றி சொல்லும் திருவிழா, அறுவடைத்திருநாள், விவசாயத்திற்கு உதவும் கால்நடைபெளுக்கு நன்றி சொல்லும் விழா என கொண்டாடப்படுகிறது.
தைப்பொங்கல் திருவிழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாளை காலை வீடுகள் தோறும் புதுப்பானையில் பொங்கலிட்டு இயற்கைக்கு படையலிட்டு சிறப்பு பூஜைகள் செய்வார்கள். மக்கள் புத்தாடை அணிந்து பொங்கலோ பொங்கல் என கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
பொங்கல் திருநாளையொட்டி தமிழ்நாட்டில், பள்ளி, கல்லூரிகளில் 1 வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி, பள்ளிகளில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
நாளை பொங்கல் என்பதால் இன்று பூக்களின் விலை மிக கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. மல்லிகை , முல்லை பூக்களின் விலை சென்னை கோயம்பேட்டில் கிலோ ரூ.2400க்கும், மதுரையில் ரூ.2ஆயிரத்துக்கும் விற்பனையானது. இதுபோல கரும்பு, மஞ்சள் கொத்து விலைகளும் அதிகமாக இருந்தது.
பொங்கல் திருநாளையொட்டி கடந்த ஒரு வாரமாக தமிழ்நாடு முழுவதும் புதுப்பானைகள் விற்பனை அமோகமாக நடந்தது. இதுபோல ஜவுளி வியாபாரமும் களைகட்டியது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் வெளி மாவட்ட மக்கள் பொங்கலை கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு கடந்த 3 தினங்களாக புறப்பட்டு சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ், ரயில்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான தனியார் பஸ்கள் சென்னைக்கு திரும்பிவிடப்பட்டுள்ளன.
அரசு பஸ்களில் நேற்று வரை 11,463 பஸ்களில் 6 லட்சத்து 40 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 17 ஆயிரம் பேர் புறப்பட்டு சென்றனர்ன்று 4-வது நாளாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கிறது. இன்று காலையில் இருந்தே மக்கள் பயணத்தை தொடங்கினார்கள். கிளாம்பாக்கம் பஸ் முனையத்திற்கு மக்கள் படையெடுத்தார்.இன்று நள்ளிரவு வரை வெளியூர்களுக்கு மக்கள் புறப்பட்டு செல்ல வசதியாக பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது. இன்று 2 லட்சத்திற்கும் மேலானவர்கள் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர ரயில், கார், வேன் என மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். பொங்கலையொட்டி சென்னையில் இருந்து மட்டும் 15 லட்சம் முதல் 20 லட்சம் பேர் வரை சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொங்கல் தினமான நாளை மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இதற்காக இன்று முதல் அலங்காநல்லூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 1,100 காளைகள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 15ம் தேதி பாலமேட்டிலும், 16ம் தேதி உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியும் நடைபெறும்.
இது தவிர தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள், விளையாட்டு போட்டிகள் நடைபெறும். பொங்கல் திருநாளையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.