துபாய் 24H கார் பந்தயத்தில் பங்கேற்க துபாயில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார் அஜித் குமார். இந்நிலையில் அந்த கார் பந்தயத்தில் 991 பிரிவில் அஜித் குமார் ரேஸிங் அணி மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.
15 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரேஸில் கலந்து கொண்ட அஜித் குமார் 3வது இடத்தை பிடித்திருப்பது சாதாரண விஷயம் அல்ல. அது மட்டும் அல்ல பயிற்சியின்போது பிரேக் பிடிக்காமல் கார் விபத்துக்குள்ளானது.
சுவரில் மோதி கார் சுற்றிய சுற்றை பார்த்து ரசிகர்கள் கதிகலங்கிப் போனார்கள். கார் நின்ற பிறகு அதில் இருந்து அஜித் குமார் நல்லபடியாக வெளியே வந்ததை பார்த்த பிறகு தான் அவர்கள் மூச்சே விட்டார்கள். ரேஸர் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா என மறுநாளே பயிற்சிக்கு சென்றுவிட்டார் அஜித்.
நம்மால் முடியும் என்று நம்பிக்கையுடன் கலந்து கொண்ட பந்தயத்தில் 3வது இடம் கிடைத்ததை அணியினருடன் கொண்டாடினார் அஜித். அவரை ஆளாளுக்கு கட்டிப்பிடித்து வாழ்த்தினார்கள். அதில் ஒருவர் அஜித்தை ஓவராக கட்டிப்பிடிக்க போதும் போதும் தலய விடுங்க, மூச்சு முட்டுப் போகுது என ரசிகர்கள் கமெண்ட் அடித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் அஜித் வெற்றி பெற்றதும் அவரை கட்டிப்பிடித்து பாராட்டியபோது எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வாழ்த்தியிருக்கிறார் நடிகர் மாதவன். மேலும் நடிகர் பிரசன்னாவும் அஜித் குமாரின் வெற்றியை பற்றி போஸ்ட் போட்டு நெகிழ்ந்திருக்கிறார்.
அஜித் குமார் ரேஸிங் டீமை பார்த்து மிகவும் பெருமையாக இருக்கிறது. கனவை எப்படி வாழ வேண்டும் என கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள் அஜித் சார். இந்த ஆண்டு கலந்து கொள்ளவிருக்கும் போட்டிகளுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார் பிரசன்னா.
இந்த வெற்றியை பற்றியே பலரும் எக்ஸ் தளத்தில் பேசி வருவதால் #AjithKumarRacing என்கிற ஹேஷ்டேக் தேசிய அளவில் முதலிடத்தில் டிரெண்டாகி வருகிறது. அஜித் குமார் பங்கேற்ற காரணத்தால் ரேஸை பார்க்க ரசிகர்கள் கூடிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற அஜித்குமாருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அஜித்குமாரின் சாதனை தொடரட்டும், உங்களை கடவுள் ஆசிர்வதிப்பார் என்று எக்ஸ் தளத்தில் ரஜினி பதிவிட்டுள்ளார்.