Skip to content
Home » சபரிமலையில் நாளை மகர விளக்கு பூஜை- சிறப்பு ஏற்பாடுகள்

சபரிமலையில் நாளை மகர விளக்கு பூஜை- சிறப்பு ஏற்பாடுகள்

  • by Authour

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மகரவிளக்கு காலம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. நாளை பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மாலையில் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜைக்கு முன்னதாக நடைபெறும் பிரசித்தி பெற்ற எருமேலி பேட்டை துள்ளல் கடந்த 11ம் தேதி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

மகரவிளக்கு பூஜை தினத்தன்று ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணம் நேற்று பந்தளத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது. இந்த ஊர்வலம் நாளை மாலை 6.30 மணியளவில் சன்னிதானத்தை அடையும். தொடர்ந்து திருவாபரணம் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும்.

இந்த சமயத்தில் தான் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தெரியும். மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 5 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக இன்றும், நாளையும் பக்தர்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இன்றும் நாளையும் ஆன்லைனில் 50,000, ஸ்பாட் புக்கிங்கில் 1,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஜன.15ம் தேதி ஆன்லைன் புக்கிங்கில் 60,000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜன.16ம் தேதி முதல் வழக்கமான முறையில் புக்கிங் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நாளை காலை 7 மணியிலிருந்து நிலக்கல்லில் இருந்து போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி வரை மட்டுமே பம்பை வரை போக்குவரத்து  இருக்கும்., 12 மணிக்கு மேல் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு பக்தர்கள் அனுமதி இல்லை. வரும் 19ம் தேதி இரவு 10 மணி வரை சபரிமலை கோயில் நடை திறந்திருக்கும். அன்று வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 20ம் தேதி காலை 7 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் மண்டல, மகரவிளக்கு காலம் நிறைவடையும்.