அகமதாபாத்தில் தால்தேஜ் பகுதியில் உள்ள சபர் (Zebar) பள்ளியில் 3வது வகுப்பு பயின்று வருகிறார் 8 வயது சிறுமி கார்கி ரன்பரா. இச்சிறுமி நேற்று வழக்கம் போல தனது பள்ளிக்கு சீருடை அணிந்து புத்தக பையுடன் சென்றுள்ளார். அப்போது பள்ளி வளாகத்தில் இருந்து தனது வகுப்பறை நோக்கி சென்றுள்ளார்.
அந்த சமயம் மாணவிக்கு தனது உடல்நிலை சரியில்லை என உணர்ந்து வளாகத்தில் உள்ள மேசையில் அமர்கிறாள். அதன் பிறகுஅப்படியே மேசையில் இருந்து சரிந்து கிழே விழுகிறாள். இதனை கண்ட பள்ளி ஊழியர்கள் உடனடியாக அந்த சிறுமியை மருத்துவமனைக்கு தூக்கி செல்கின்றனர். இவை தான் அந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
இதனை அடுத்து, நேற்று தனியார் செய்தி நிறுவனங்களில் வெளியான தகவலின்படி, மயங்கி விழுந்த அச்சிறுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக 8 வயது சிறுமி உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வயதானவர்களில் ஒரு சிலருக்கு வந்து கொண்டிருந்த மாரடைப்பு தற்போது வயது வித்தியாசம் இன்றி பலரையும் தாக்கி வருகிறது. இதற்கு குழந்தைகளும் உயிரிழக்கும் சூழல் உருவாகியுள்ளது பலரையும் வருத்தமடைய செய்துள்ளது.