பொங்கல் என்றாலே பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது குறிப்பாக பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் பெரும்பாலான பள்ளி, கல்லூரி அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டம், கோடங்கிப்பட்டி பகுதியில் உள்ள தனியார் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் அறிவியல் கல்லூரியில் ஆண்டுதோறும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டில் மிகவும் உற்சாகமாகவும் கல்லூரி மாணவிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆட்டம் பாட்டத்துடனும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சி முன்னிட்டு மாணவிகள், பள்ளி மாணவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்டோர் வண்ணமிகு ஆடையில் கல்லூரிக்கு
வருகை புரிந்து கல்லூரி வளாகத்தில் வண்ண கோலமிட்டு பிரம்மாண்ட பொங்கலிட்டு, பொங்கலோ பொங்கல் என்று கோஷம் எழுப்பி விழாவை ஆரம்பித்தனர் .
அதனைத் தொடர்ந்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் பணிபுரியும் ஊழியர்களுக்கு என தனித்தனியாக பாட்டிலில் நீர் நிரப்புதல், லெமன் ஸ்பூன், சாக்குப்போட்டி, பானை உடைத்தல் உள்ளிட்ட விளையாட்டு போட்டி நடைபெற்றது.
மேலும் அம்மன் பாடலுக்கு கல்லூரி மாணவிகள் வேப்பிலையுடன் உற்சாகமாக நடனமாடினர் அதனைத் தொடர்ந்து சினிமா பாடல்களுக்கு கல்லூரி மாணவிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் என அனைவரும் ஒன்றாக உற்சாகமாக நடனமாடி பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.