தஞ்சை மாவட்டத்திலேயே வறட்சியான, மிகவும் பின்தங்கிய கிராமமான பூதலூர். இங்கு விவசாயமே பிரதான தொழில், விவசாயத்தை தவிர வேறு தொழில் கிடையாது. விவசாயத் தொழிலாளர்கள் மிக அதிகமாக வசிக்கிறார்கள்.
100 நாள் வேலையை நம்பி பல குடும்பங்கள் உள்ளன. அதுவும் முழுமையாக கிடைப்பதில்லை சம்பளம் சரிவர கிடைப்பதில்லை.
குடிமனைப் பட்டா கேட்டு மனுகொடுத்து காத்திருப்பவர்கள் அதிகம் உள்ளனர். அரசு தொகுப்பு வீடு கிடைக்காமல் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்கள் ஏராளம்.
மேலும், கிராமப்புறத்திற்கு கிடைக்க வேண்டிய பல நலத்திட்டங்கள் பூதலூருக்கு முழுமையாக கிடைக்கவில்லை. ஆனாலும் தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தாலுகா மருத்துவமனை, பத்திரப்பதிவு அலுவலகம், அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல் நிலைப்பள்ளிகள், அரசு கலைக்கல்லூரி, தேசிய நெடுஞ்சாலை, ரயில் நிலையம் ரயில்வே மேம்பாலம் ஆகிய உள்கட்டமைப்பு வசதிகள் மக்கள் பிரதிநிதிகளின் முயற்சியால் பூதலூருக்கு கிடைத்துள்ளது.
ஆனால் மக்கள் வாழ்வாதாரத்திற்கான எந்த வாய்ப்புகளும் இல்லை. ஆகவே, முழுக்க விவசாயத்தையும் விவசாயம் சார்ந்த தொழிலையுமே நம்பியுள்ள பூதலூர் வாழ்வாதரம் பாதுகாக்கப்பட்ட வேண்டுட் 100 நாள் வேலை முழுமையாக தொடர்ச்சியாக கிடைக்க வேண்டும். பேரூராட்சியாக மாற்ற முயற்சிப்பதை கைவிட வேண்டும், ஊராட்சியை இரண்டாக பிரிக்க வேண்டும் என வலியுறுத்தி
பூதலூர் நான்கு ரோட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பூதலூர் தெற்கு ஒன்றியக்குழு சார்பில், வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். சிபிஎம் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், மூத்த தோழர் ராஜகோபால், கோவிந்தராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மருதமுத்து, தமிழரசன், அஞ்சலி தேவி, சரவணன், அறிவழகன், முருகன் மற்றும் கட்சியினர், பொதுமக்கள் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
100 நாள் வேலையை தொடர்ச்சியாக வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக பொங்கலுக்குள் வழங்கிட வேண்டும்.
வீடில்லா ஏழை, எளிய மக்களுக்கு அரசு தொகுப்பு வீடு உடனடியாக வழங்கிட வேண்டும். இடிந்து விழும் அபாயத்தில் உள்ள அரசு தொகுப்பு வீடுகளை மராமத்து செய்து தர வேண்டும்.
குடிமனைப் பட்டா இல்லாத ஏழை மக்களுக்கு இலவச குடிமனைப் பட்டா வழங்கிட வேண்டும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அனத்து பெண்களுக்கும் வழங்கிட வேண்டும். அரசு காப்பீடுத்திட்டம் அனைவருக்கும் கிடைக்கச் செய்திட வேண்டும். விதவை, முதியோர் ஓய்வூதிய பென்சனை நிறுத்தாமல் அனைவருக்கும் வழங்கிட வேண்டும். ரேசன் கடைகளில் அத்திவாசிய பொருட்கள் அனைத்தையும் ஏழை எளிய மக்களுக்கு கிடைக்கச் செய்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, அங்கு வந்த வருவாய்த்துறையினர், காவல் துறையினர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.