தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் குறித்து, விஜய்யின் ஆலோசகராகவும், தவெக தேர்தல் வியூக வகுப்பாளராகவும் செயல்பட்டு வரும் ஜான் ஆரோக்கியசாமி பேசியதாக வெளியாகியிருக்கும் ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் ‘‘புஸ்ஸி ஆனந்த் தன்னை முன்னிலைப்படுத்துவதால் கட்சிக்குதான் பின்னடைவு ஏற்படுகிறது. விஜய் என்ற ஒற்றை நபருக்காக தான், இந்த கட்சிக்கு வாக்குகள் வரப்போகிறது. அப்படி இருக்கும்போது, புஸ்ஸி ஆனந்த் தன்னை முன்னிலைப்படுத்தி வருவது கட்சிக்கு பின்னடைவுதான். திமுகவில் ஸ்டாலின் புகைப்படத்துக்கு பதிலாக, துரைமுருகன் படத்தை போட்டால் வாக்குகள் கிடைக்குமா? ஜெயலலிதா புகைப்படத்துக்கு பதிலாக சசிகலா புகைப்படத்தை வைத்தால் வாக்குகள் வருமா? நான் பாமகவுக்கு வேலை பார்க்கும்போது, ராமதாஸை தவிர்த்து, அன்புமணியை மட்டுமே தான் முன்னிலைப்படுத்தினேன். எந்த கட்சியாக இருந்தாலும், முதல்வர் வேட்பாளரைதான் முன்னிலைப்படுத்த வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி, அண்ணா வரிசையில் விஜய்யை இடம்பெற செய்ய நான் வேலை செய்து வருகிறேன். அப்படியிருக்க, கோமாளி கூட்டங்களை கட்சிக்குள்ளே விட்டால் எப்படி? இது தவறு. கட்சிக்கு விஜய்யின் முகம் மட்டும்தான் இருக்கிறது. மற்றபடி புஸ்ஸி ஆனந்த்தான் எல்லாம் என நிர்வாகிகள் நினைத்துவிட்டனர். 30 சதவீதம் வாக்குகள் வாங்கும் அளவுக்கு நான் வேலை பார்த்து வருகிறேன். ஆனால், இப்படியே போனால், 2 சதவீத வாக்குகள் கூட தேறாது’ என அந்த ஆடியோவில் பேசப்பட்டுள்ளது.