Skip to content
Home » ரேஷன் கடைகளில் பொங்கல் கரும்பு தயார்… நாளை முதல் வழங்க ஏற்பாடு…

ரேஷன் கடைகளில் பொங்கல் கரும்பு தயார்… நாளை முதல் வழங்க ஏற்பாடு…

அரியலூர் மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்க, தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள தகுதி வாய்ந்த 2,48,876 அரிசிபெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசு வழங்குவதற்கு ஏதுவாக, பொங்கல் பரிசு வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களைக் குறிப்பிட்டு, டோக்கன்கள் கடந்த 02.01.2025 முதல் துவக்கப்பட்டு, இன்று வரை வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் நாளை 09.01.2025 முதல் 13.01.2025 வரை தெரு வாரியாகவும், தேதி வாரியாகவும் குடும்ப அட்டைதாரர்கள் பரிசுதொகுப்பு பெற வேண்டிய நாள் மற்றும் நேரம் குறிப்பிட்டு சுழற்சி முறையில் விநியோகம் வழங்கப்பட உள்ளது.

இந்தத் தொகுப்பில் வழங்குவதற்காக அறிவிக்கப்பட்ட முழு செங்கரும்பு வயதில் இருந்து வெட்டப்பட்டு லாரிகள் மூலம் அந்தந்த நியாய விலை கடை அங்காடிகளுக்கு கொண்டுவரப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அனைத்து அட்டைதாரர்களுக்கும் முழு செங்கரும்புடன் அரிசி மற்றும் சர்க்கரை அடங்கிய தொகுப்பு வழங்கப்பட உள்ளது. பொதுமக்கள் இந்த தொகுப்பை பெற்றுக் கொள்வதற்காக, நாள் மற்றும் நேரம் அந்தந்த நியாய விலைக் கடை

முன்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. விடுமுறை நாளான வெள்ளிக்கிழமையும் (10.01.2025) அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம், நியாய விலைக் கடைகளின் விற்பனை முனைய இயந்திரத்தில் விரல் ரேகை சரிபார்ப்பு (Biometric Authentication) வாயிலாகவே மேற்கொள்ளப்படுகிறது. விரல் ரேகை சரிவர தெளிவாக பதிய இயலாத அட்டைதாரர்களுக்கு மட்டும், சம்மந்தப்பட்ட நபர் நேரில் வருகை தருவதை உறுதி செய்து, பதிவேட்டில் கையொப்பம் பெற்று, பரிசுத்தொகுப்பு விநியோகிக்கவும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. எக்காரணத்தைக் கொண்டும், அங்கிகரிக்கப்பட்ட நபர் வாயிலாகவோ, இதர நபர் வாயிலாகவோ பரிசுத்தொகுப்பு வழங்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதற்காக வரும் மாற்றுத்திறனாளிகள், கர்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்களை வரிசையில் நிற்க வைக்காமல் முன்னுரிமை வழங்க உத்திரவிடப்பட்டுள்ளது.
அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்க்கும் விடுபாடின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்றும், குடும்ப அட்டைதாரர்கள் எவ்வித சிரமமுமின்றி நியாய விலைக் கடைகளுக்குச் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக்கொள்ளவும், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.