Skip to content
Home » அதிமுகவை நோக்கி 100 சார் கேள்விகள் கேட்க முடியும்- முதல்வர் அதிரடி பதில்

அதிமுகவை நோக்கி 100 சார் கேள்விகள் கேட்க முடியும்- முதல்வர் அதிரடி பதில்

அண்ணா பல்கலைக்கழக  மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு  தொடர்பாக  சட்டமன்றத்தில் இன்று  எதிர்க்கட்சிகள்  கவன ஈர்ப்பு தீர்மானம்  கொண்டு வந்து  பேசினர். கேள்வி நேரத்தை ரத்து செய்து விட்டு இந்த பிரச்னை எடுத்துக்கொள்ளப்பட்டது.  ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு உறுப்பினர் பேச அனுமதிக்கப்பட்டனர்.

அதன்படி   வேல்முருகன்(தவாகா),  கொங்கு ஈஸ்வரன்,  மாரிமுத்து(இந்திய கம்யூ) நாகை மாலி(சிபிஎம்),  ஜி.கே. மணி(பாமக) புரட்சி பாரதம் பூவை ஜெகன் மூர்த்தி,  சதன் திருமலைக்குமார்(மதிமுக),   சிந்தனை செல்வன்(விசிக), காந்தி(பாஜக), செல்வப்பெருந்தகை(காங்) உள்பட பலர் பேசினர்.

இதில் பலரும் கவர்னர்  ரவி மீது குற்றம் சாட்டினர். குறிப்பாக வேல்முருகன்,  இந்த சம்பவத்துக்கு கவர்னர் தான் பொறுப்பு என்றார். யார் அந்த சார் என்பதை வெளிகொணர வேண்டும் என்று விசிக உள்பட  சில உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.  யார் அந்த சார் என்பதை  அறிவிக்க வேண்டும்  என்று  கொங்கு கட்சியும், பாஜகவும்  வலியுறுத்தியது.  தமிழ்நாடு அரசு தான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று பாஜக காந்தி வலியுறுத்தினார்.

போராட்டம் நடத்த அனுமதிக்கப்படுவதில்லை என  பலர் குற்றம் சாட்டினர்.   போராட்டம் நடத்திய பாமக  பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்ணா பல்கலை சம்பவம்  நாட்டை உலுக்கி விட்டது அந்த குற்றவாளி மீது எடுக்கப்படட நடவடிக்கை போதாது. குற்றவாளிக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜிகே மணி கூறினார்.

இந்த நிலையில்  முதல்வர்  ஸ்டாலின் எழுந்து, அனுமதி இன்றி நேற்று திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக திமுகவினர் மீது  வழக்கு போடப்பட்டு உள்ளது.  ஆளுங்கட்சியாக இருந்தாலும் திமுக மீது வழக்கு போடப்பட்டு உள்ளது.  எப். ஐ. ஆர். போடப்பட்டுள்ளது.  போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி பெற வேண்டும்.  அனுமதி பெறாமல் போராட்டம் நடத்த முடியாது, அனுமதி பெற்றாலும் குறிப்பிட்ட இடத்தில் தான் போராட்டம் நடத்த வேண்டும்.   போராட்டத்திற்கு அனுமதி வழங்குவதில்  போலீஸ் பாரபட்சம் காட்டுவதில்லை என்றார்.

செல்வப்பெருந்தகை பேசும்போது  தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி குறிப்பிட்டார்.    பிரச்னையை  டிவியில் பார்த்து தெரிந்து கொள்பவர் அல்ல முதல்வர் ஸ்டாலின் என எடப்பாடியை மறைமுகமாக   தாக்கி பேசினார். . இதற்கு அதிமுகவினர்  எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் போட்டு ரகளையில் ஈடுபட்டனர்.  சபையில் இல்லாதவரைப்பற்றி பேசக்கூடாது ,  செல்வபெருந்தகையை  பேசக்கூடாது என  அதிமுகவினர் கூச்சல் போட்டனர்.

உறுப்பினர் சபைக்கு வராவிட்டாலும், சபையில் உறுப்பினராக இருப்பவர் குறித்து பேசலாம் என  அவை முன்னவர்  அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்தார்.

எதிர்க்கட்சித்தலைவரை திட்டமிட்டு  குற்றம் சாட்டுவதை ஏற்க முடியாது, பெண்கள் பாதுகாப்பில்  அரசு அலட்சியமாக உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுகிறார்கள்.   அண்ணா பல்கலை  சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் திமுக காரர். இந்த விவகாரத்தில் ஏன் முதல்வர்   விளக்கம்  சொல்லவில்லை ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி,  எதிர்க்கட்சிக்கு ஒரு நீதியா உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படும்வரை போராட்டம் தொடரும்    என்று  அதிமுக துணைத்தலைவர் உதயகுமார் கூறினார்.

முதல்வர் ஸ்டாலின்:  அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவார்கள். ராணி மேரி கல்லூரி விவகாரததில்  மாணவிகளுக்கு ஆதரவாக  குரல் கொடுத்ததற்காக அதிமுக அரசு என்னை கைது செய்து தொலை தூரத்திற்கு கொண்டு சென்று அடைத்தனர்.

சபாநாயகர்:  இந்த விவாதத்தின்    இறுதியில் விளக்கம் அளிக்க முதல்வர் தயாராக  இருக்கிறார்.

சபாநாயகர்: இந்த விவாதத்தின் இறுதியில் விளக்கம் அளிக்க முதல்வர் தயாராக இருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின்: யார் அந்த சார் என்று கேட்கிறீர்கள். ஆதாரம் இருந்தால் சிறப்பு புலானாய்வு குழுவிடம் கொடுங்கள். அதை விடுத்து சென்சிட்டிவான இந்த வழக்கில் மலிவான விளம்பரம் தேட வேண்டாம். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் இரும்பு கரம் கொண்டு அடக்குவோம்.

மாணவி சத்யா கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை பெற்று தந்தோம். எதிர்கட்சிகளின் போராட்டிற்கு நீதிமன்றமே கண்டனம் தெரிவித்துள்ளது. எப்ஐஆர் வெளியானதுக்கு தேசிய தகவல் மையம் தான் காரணம். தமிழக அரசு மீது தவறான எண்ணத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.

அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் என்ன நடந்தது, எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டார்கள். புகார் கொடுத்த அந்த பெண்ணின் அண்ணனை தாக்கினார்கள், சிபிஐ வசம் அந்த வழக்கு சென்ற பிறகு தான் உண்மை வெளிவந்தது.

முதல்வர் இவ்வாறு பேசிய போது அதிமுகவினர் முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து முதல்வர் பேசியதாவது: பொள்ளாச்சி சம்பவத்தில் அதிமுகவினரை காப்பாற்ற அரசு முயற்சி செய்தது. அந்த வழக்கில் எப்ஐஆர் போட 12 நாட்கள் ஆனது (அதிமுகவினர் வெளிநடப்பு)

இந்த வழக்கில் வேறு யாரும் தொடர்பில் இருந்தால் நிச்சயமாக அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை. எனவே எதிர்கட்சிகளின் போராட்டம் ஒரு போதும் எடுபடாது. போராட்டம் நடத்தி மாணவிகளின் உயர்கல்வியை கெடுத்து விடாதீர்கள். அதிமுகவை நோக்கி 100 சார் கேள்விகளை எங்களால் கேட்க முடியும்.  எனவே  பெண்களின்  பாதுகாப்புக்கு தங்களால் இயன்ற ஒத்துழைப்பை  வழங்குங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் திமுக அனுதாபி தானே தவிர  திமுக காரர் அல்ல.  திமுக காரராக இருந்தாலும் உறுதியாக நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.