தஞ்சை மாவட்டம், பாபநாசம் வேளாண் உதவி இயக்குநர் சுஜாதா கூறியதாவது…. தங்கப் பயிர் சோயா என விவசாயிகளால் விரும்பி அழைக்கப்படும் சோயா பீன்ஸ் சாகுபடி தற்போது பாபநாசம் வட்டாரத்தில் பரவலாக விவசாயிகளால் மேற்க் கொள்ளப்பட்டு வருகிறது. புழுதி உழவு மேற்கொண்டு, டிராக்டர் மூலம் வரிசையில் விதைக்கும் கருவியினால் சோயாவை விதைத்தால், சரியான பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்பட்டு, உயர் விளைச்சல் கிடைக்கும். அதன் அடிப்படையில் ஈச்சங்குடி கிராமத்தில் ஒரு விவசாயியின் வயலில் விதைப்பு கருவி கொண்டு வரிசையில் சோயா இன்று விதைப்பு செய்யப்பட்டது. தைப்பட்டத்தில் விதைப்பு செய்யப்படும் சோயா 100 நாள் வயதுடையது. ஏக்கருக்கு 1200 kg மகசூல் பெறலாம். தானிய எடைக்கு நிகரான இலை தழைகளை சோயா உதிர்ப்பதால் மண்வளம் பல மடங்கு அதிகரிக்கிறது.
பாபநாசம் கணபதி அக்ரகாரம் கூனஞ்சேரி ஆகிய விரிவாக்க மையங்களில் சோயா விதைகள் மற்றும் விதை நேர்த்தி மருந்து ஆகியவை 50 சத மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. எனவே தைப்பட்டத்தில் சோயா சாகுபடி செய்து அதிக மகசூல் பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மை விரிவாக்க அலுவலரை அணுகி பயன்பெறலாம். மேலும் விவசாயிகள் விளைவிக்கும் சோயா விதைகளை நல்ல விலைக்கு தனியார் நிறுவனம் உடன் கொள்முதல் செய்து தொகை வழங்குகிறது. எனவே மண்வள பாதுகாப்பு, குறுகிய காலத்தில் நிறைந்த மகசூல், உயர்ந்த வருவாய் ஆகிய பல்வேறு பயன்களை கொண்ட தங்கப்பயிர் சோயாவை அனைத்து விவசாயிகளும் சாகுபடி செய்து அதிக வருவாய் பெறலாம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.