திருச்சி மாவட்ட எஸ்.பி. சுஜித்குமாரிடம், பூலாங்குடி கிராமத்தை சேர்ந்த மக்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்துள்ள பூலாங்குடி கிராமத்தில்கடந்த 1977 ம் வருடம் வீட்டுமனை இல்லாத 250 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தமிழக அரசால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 3சென்ட் நிலம் வழங்கப்பட்டது. தற்போது மேற்கண்ட நிலத்தை அரியமங்கலம் உக்கடை பகுதியை சேர்ந்த ஷாஜகான் என்பவர் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு எங்களது இடத்திற்கான தமிழக அரசால் வழங்கப்பட்ட ஒப்படை ஆவணங்களை பிடுங்கி வைத்துக் கொண்டு மேற்கண்ட நிலம் எங்களுடைய பூர்வீக நிலம் உங்கள் யாருக்கும் இதில் உரிமை இல்லை வேண்டுமென்றால் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 5000 தருகிறேன் என்று மிரட்டி எங்களிடமிருந்து தமிழக அரசால் கொடுக்கப்பட்ட ஒப்படை ஆவணங்களை பறித்து வைத்துக் கொண்டு வேறு நபர்களுக்கு இரண்டு லட்சம் முதல் 3 லட்சம் வரை விற்பனை செய்து வருகிறார்.
மேலும் பூலாங்குடியில் எங்களுக்கு கொடுக்கப்பட்ட நிலம் யாருக்கும் விற்கவோ அல்லது எந்தவித வில்லங்கத்திற்கும் உட்படுத்த கூடாது என்ற நிபந்தனையின் பேரில் தமிழக அரசு எங்களுக்கு வழங்கியுள்ளது.
ஆனால் அரியமங்கலத்தை சேர்ந்த ஷாஜகான் என்பவர் எங்களிடம் இருந்து இடத்திற்கான ஆவணங்களை அடியாட்களை கொண்டு மிரட்டி பிடுங்கி வைத்துக்கொண்டு எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அத்துடன் ஷாஜஹான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட எஸ்.பி. விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.