ராஜஸ்தான் கோட்புட்லி பகுதியில் கிர்தாபுரா என்ற இடத்தில் கடந்த டிச.23ம் தேதி ஆழ்துளை கிணற்றில் 3 வயது குழந்தை தவறி விழுந்தது. குழந்தையின் அழுகுரல் கேட்டு அவரது பெற்றோர் தேடிய நிலையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது தெரிய வந்தது. ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்த தகவல் தரப்பட்டு உடனடியாக தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் வரவழைக்கப்பட்டது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க குழாய் வழியாக ஆக்சிஜன் வழங்கப்பட்டது.
குழந்தைக்கு ஆக்சிஜன் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் உணவு ஏதும் வழங்கப்படாததால் உடல்நிலை மோசமானது. ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் சுரங்கம் தோண்டி குழந்தையை மீட்க முயற்சித்த நிலையில் பலன் தரவில்லை.
ஜெய்பூர், டில்லியில் இருந்து மெட்ரோ ரயில் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சுரங்கம் தோண்டப்பட்டு குழந்தை மீட்கப்பட்டது. குழந்தையை மீட்கும் முயற்சி 5 முறைக்கும் மேல் தோல்வி அடைந்த நிலையில் இறுதியாக ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் சுமார் 12 அடி வரை சுரங்கம் தோண்டி மீட்புக் குழு குழந்தையை மீட்டது
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக நடந்த மீட்புப் பணியால் 10 நாட்களுக்குப் பின் குழந்தை மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.