கால் காசு சம்பளமா இருந்தாலும், கவர்மெண்ட் சம்பளம் என்பார்கள். ஏனென்றால் ஒவ்வொருவரின் கனவும் அரசு வேலையை பெறுவது தான். இதற்காக படிக்கும்போதே தங்கள் குழந்தைகளை தயார் செய்யும் வகையில் பெற்றோர், குழந்தைகளை பல்வேறு பயிற்சி மையங்களுக்கு அனுப்புகிறார்கள்.
அரசு வேலைக்காக மத்திய அரசு நிறுவனங்கள் யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, மற்றும் ரயில்வே போர்டு, வங்கி தேர்வு வாரியம், பொது நிறுவனங்களுக்கு ஆள் தேர்வு செய்யும் நிறுவனங்கள் அவ்வப்போது தேர்வுகள் நடத்துகிறது.
தமிழக அரசும் டிஎன்பிஎஸ்சி என்ற தேர்வாணையம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பலவகை தேர்வுகள் நடத்தி, அடிப்படை ஊழியர் முதல் உதவி கலெக்டர், உதவி போலீஸ் சூப்பிரெண்டு வரை அரசு பணிக்கு ஆள் தேர்வு செய்கிறது. இந்த தேர்வுகளை எழுத வேண்டுமானால் அதற்கான கல்வித்தகுதியும் வேண்டும்.
ஒரு காலத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு சீனியாரிட்டி மூலம் வேலைவாய்பு வழங்கப்பட்டது. ஆனால் இப்போது தேர்வுகள் மூலம் மட்டுமே அரசு பணிக்கு ஆள் தேர்வு நடக்கிறது. ஒரு சில கடைநிலை பணிகளுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு சீனியாரிட்டி கோரப்படுகிறது.
இருந்தபோதிலும் தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தங்கள் பெயர்களை பதிவு செய்யும் நிலை இன்றும் அதிகமாக காணப்படுகிறது. வேலை கிடைக்காத பட்டதாரிகளுக்கு மாத உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இதை பெறவும் இந்த பதிவு பயன்படும்.
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பக அலுவலகங்கள் செயல்படுகிறது. கடந்த டிசம்பா் 31-ம் தேதி வரையிலான காலத்தில் தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவா்களின் எண்ணிக்கை விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:- அரசுப் பணிக்காக, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 67 லட்சத்து 75 ஆயிரத்து 250 ஆகும். அவா்களில் ஆண்கள் 36 லட்சத்து 14 ஆயிரத்து 327. பெண்கள் 31 லட்சத்து 60 ஆயிரத்து 648. மூன்றாம் பாலினத்தவா் 275. இவா்களில் 19 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவா்களே அதிகமாக உள்ளனா்.
இந்த வயதைச் சோ்ந்தவா்கள் 27 லட்சத்து 95 ஆயிரத்து 278 போ். 18 வயதுக்குக் குறைவானவா்கள் 19 லட்சத்து 9 ஆயிரத்து 325 பேரும், 31 முதல் 45 வயதுக்கு உட்பட்டவா்கள் 18 லட்சத்து 34 ஆயிரத்து 994 பேரும், 46 முதல் 60 வயதுக்கு உட்பட்டவா்கள் 2 லட்சத்து 29 ஆயிரத்து 978 பேரும் உள்ளனா்.
60 வயதைக் கடந்தவா்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 675 ஆக உள்ளது. ஒட்டுமொத்த பதிவுதாரா்களில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 396 மாற்றுத் திறனாளிகளும் உள்ளனா். அவா்களில் ஆண்கள் 95 ஆயிரத்து 247 பேரும், பெண்கள் 48 ஆயிரத்து 149 பேரும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.