ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 31ம் தேதி தொடங்கியது. இன்று 3ம் நாளாக வேட்புமனு தாக்கல் நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
அதிமுக எடப்பாடி அணி சார்பில் முன்னாள் எம்.எல்.எ. தென்னரசு நிறுத்தப்பட்டு உள்ளார். அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் டி. செந்தில்முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுகவிலேயே 2 பேர் போட்டியிட உள்ளதால், இவர்களில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.
அதிமுக பொதுக்குழுவில் தன்னை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்து உள்ளனர். இதை தேர்தல் கமிஷன் அங்கிகரிக்க உத்தரவிடவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தொடர்பாக சசிகலாவும் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள இடையீட்டு மனுவை ஏற்கக்கூடாது. தள்ளுபடி செய்ய வேண்டும் , அதிமுக பிரதிநிதி என்ற முறையில் அவர் மனு தாக்கல்ெ சய்ய உரிமையில்லை என அதில் கூறி உள்ளார்.
பழனிசாமி இடையீட்டு மனு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில் ஓபிஎஸ் தாக்கல் செய்துள்ள மனுவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 7ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள். வேட்புமனுக்களை வாபஸ் பெற 10ம் தேதி கடைசி நாள் என்பதால் அதற்குள் இந்த வழக்கில் ஒரு தீர்ப்பு கிடைக்காவிட்டால், எடப்பாடி, ஓபிஎஸ் ஆகிய இரு அணியினரும் சுயேச்சை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டிய நிலை ஏற்படும் என தெரிகிறது.