Skip to content
Home » “லப்பர் பந்து” படத்தை பாராட்டிய நடிகர் மோகன்லால்….

“லப்பர் பந்து” படத்தை பாராட்டிய நடிகர் மோகன்லால்….

  • by Authour

தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்து சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படத்தை பாராட்டி நடிகர் மோகன்லால் பேசியுள்ளார்.நடிகர் மோகன்லால் தற்போது இயக்கி நடித்திருக்கும் படம் பரோஸ். இது இவர் இயக்கும் முதல் படமாகும். இந்த படத்தில் இவருடன் குரு சோமசுந்தரம், மீரா ஜாஸ்மின், ஸ்பானிஷ் நடிகை பாஸ் வேகா, ரபேல் அமர்கோ உட்பட பலர் நடித்துள்ளனர். அந்தோணி பெரும்பாவூர் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார் லிடியன் நாதஸ்வரம் இசையமைப்பில் 3டி-யில் உருவாகியுள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் நேற்று திரையரங்குகளில் வெளியானது.இப்படத்தின் புரோமோஷனுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளில் மோகன்லால் கலந்துகொண்டார். இதில் தனது திரையுலக வாழ்க்கையைப் பற்றி பல்வேறு விஷயங்களைப் பற்றி அவர் பகிர்ந்துகொண்டார். அப்போது சமீபத்தில் வெளியான லப்பர் பந்து படத்தைப் பற்றி மோகன்லால் பேசியது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

மலையாளத்தில் இந்த ஆண்டு மிகச்சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. பிரேமலு, பிரம்மயுகம், ஆவேசம், மஞ்சுமல் பாய்ஸ், கிஷ்கிந்தா காண்டம், உள்ளொழுக்கு என மலையாளத்தின் அடுத்தடுத்த படங்கள் பான் இந்தியா படங்களாக வெளியாகி மலையாள ரசிகர்களை மட்டுமில்லாமல் மற்ற மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வசூல் சாதனை படைத்துள்ளன. அந்த வகையில் மோகன்லாலிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. மலையாளத்தில் அழுத்தமான கதைக்களங்களில் படங்கள் வெளியாவது போல தமிழ் படங்கள் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மோகன்லால், ” தமிழில் நிறைய அருமையான படங்கள் வெளியாகி இருக்கின்றன. சமீபத்தில் வெளியான லப்பர் பந்து திரைப்படம் மிக சின்ன சின்ன விஷயங்களை வைத்து அருமையாக எடுக்கப்பட்ட ஒரு படம்” என்று தெரிவித்தார்.

கனா, எப்.ஐ.ஆர் படங்களில் இணை இயக்குனர் மற்றும் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் `லப்பர் பந்து’. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடித்துள்ளனர். சுவாசிகா விஜய் மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரிக்கெட்டை மையமாக வைத்து குடும்ப படமாகவும் இது உருவாகியுள்ளதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. `லப்பர் பந்து’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 20ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் திரை பிரபலங்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது.