2024ம் ஆண்டு இதே டிசம்பர் 26ம் தேதி அதிகாலை பொழுது நன்றாகத்தான் விடிந்தது. சுமார் 9 மணி அளவில் திடீரென கடல் பொங்கியது என செய்தி தமிழகத்தில் பேரதிர்ச்சியான செய்த மக்களை தாக்கியது. அதுவரை கடல் இப்படி பொங்கியதை மக்கள் கேள்விபட்டிருக்க கூட வாய்ப்பில்லை.
பத்திரிகையாளர்களுக்கு கூட சுனாமி என்ற வார்த்தை அப்போது பரீட்சயமில்லை. எனவே அன்றைய மாலை நாளிதழ்களில் கடல் பொங்கியது. நாகையில் 10 ஆயிரம் பேர் பலி என்ற சோக செய்திகள் தான் வெளியாகி இருந்தது.
மறுநாள் தான் இந்த கடல் கொந்தளிப்புக்கு சுனாமி என்ற பெயர் உள்ளது தெரியவந்தது. வழக்கமாக இந்த சுனாமி ஜப்பானில் ஏற்படும் என்றும் தெரியவந்தது.
இந்தோனேசியாவில் சுமத்ரா தீவுக்கு அருகே 2004 ம் ஆண்டு இதே நாளில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பூகம்பத்தால் சுனாமி தாக்குதல் நடந்தது. இந்த தாக்குமல் இந்தியாவில் தமிழ்நாட்டைத் தான் தாக்கியது. இதுதவிர இலங்கை உள்பட பல்வேறு நாடுகளிலும் தாக்குதல் நடத்தியது. சுமார் 1 மணி நேரம் தான் இந்த தாக்குதல் இருந்தது. அதற்குள் தமிழ் நாட்டில் மட்டும் ஏறத்தாழ 10 ஆயிரம் பேரை கடல் அலை கொன்று குவித்தது. இதில் பெரும்பாலானவர்களின் சடலங்கள் கிடைக்கவே இல்லை.
இந்தியாவில் அதிகாரபூர்வ மதிப்பீடுகளின்படி, 10,136 பேர் இறந்தனர் மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் வீடற்றவர்கள் ஆனார்கள் என்று கூறப்பட்டாலும் சேத மதிப்பு அதிகமாகவே இருந்ததாக கூறுகிறார்கள்.
தமிழ்நாட்டில் நாகை மாவட்டம் தான் அதிகமான உயிர்களை காவு கொடுத்தது. கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்த மறுநாள் காலை மக்கள் வேளாங்கண்ணி கடற்கரையில் குவிந்திருந்தனர். அங்கு மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பார்கள்.
இதுபோல நாகை மீனவர் கிராமங்கள், மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் உள்ள பழையாறு பகுதி, தரங்கம்பாடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் , சென்னை ஆகிய இடங்களிலும் பெரிய அளவு பாதிப்பு ஏற்பட்டது. தஞ்சையில் மாவட்டத்தில் ஒரே ஒருவர் பலியானார். திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் கடல் பகுதிகளிலும் சுனாமியை உணர முடிந்தது. நெல்லை, தூத்துக்குடி, மாவட்டங்களும் இதில் பாதிக்கப்பட்டது. சுனாமி தாக்குதலின்போது கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலையின் தலை பகுதிக்கு வந்து அலை தாக்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த துயரமான சம்பவம் நடந்து 20 வருடங்கள் உருண்டோடி விட்டன. சுனாமி தாக்குதலின் 20 ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. திமுக சார்பில் நாகையில்இன்று அமைதி ஊர்வலம் சென்று இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இதுபோல கடலூல், பழையாறு உள்ளிட்ட இடங்களிலும், சென்னையிலும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடந்தது. அப்போது அவர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.
சொந்த பந்தங்களை இழந்தவர்கள் தங்கள் உறவினர்களின் ஆன்மா சாந்தியடைய கடலில் பால் ஊற்றி வேண்டினர். சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கவர்னர் ரவி ஊர்வலமாக சென்று பால் ஊற்றும் சடங்குகளை செய்தார். மயிலாடுதுறை மாவட்டத்தில் நடக்கும் சுனாமி நினைவு நிகழ்ச்சியில் கலெக்டர் மகாபாரதி கலந்து கொள்கிறார்.