முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: வெளிப்படைத்தன்மை கொண்ட தேர்தல் முறையை ஒழிக்கும் வகையில் தேர்தல் நடத்தை விதிகள் 93 (2) (அ)-இல் செய்யப்பட்டுள்ள ஆபத்தான திருத்தத்தால் மக்களாட்சி தனது மிகப்பெரும் அச்சுறுத்தலை ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் இருந்து எதிர்நோக்கியுள்ளது.
தனது அமைப்பின் சுதந்திரத்துக்காகப் போராடுவதற்குப் பதிலாகத் தேர்தல் ஆணையமும் பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான அரசின் அழுத்தத்துக்கு மனமுவந்து பணிந்திருப்பதும், நேர்மையான – நியாயமான தேர்தல் எனும் தனது குழந்தையையே அது உருக்குலைத்திருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.
நம் நாட்டில் சுதந்திரமான – நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதன் மீது தொடுக்கப்பட்டுள்ள மக்களாட்சிக்கு விரோதமான இந்தத் தாக்குதலை எதிர்க்க பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.