Skip to content
Home » திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா ஜன.14ல் தொடக்கம்

திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா ஜன.14ல் தொடக்கம்

திருவையாறில் ஸ்ரீசத்குரு தியாகராஜ சுவாமிகளின் 178-வது ஆராதனை விழாவுக்கான பந்தல்கால் முகூர்த்தம் நேற்று நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஸ்ரீசத்குரு தியாகராஜ சுவாமிகள் சித்தியடைந்த பகுள பஞ்சமி தினத்தில்  தியாகராஜர் ஆராதனை விழா நடைபெறும். ஒவ்வொரு  ஆண்டும்  நடைபெறும் இந்த விழாவில், நாடெங்கிலும் உள்ள சங்கீத வித்வான்கள், இசைக் கலைஞர்கள் பங்கேற்பர்.

நிகழ்ச்சியில், தியாகப்பிரம்ம மகோத்சவ சபா அறங்காவலர்கள் சந்திரசேகர மூப்பனார், சுரேஷ் மூப்பனார், எஸ்.கணேசன், எம்.ஆர்.பஞ்சநதம், டெக்கான் என்.கே.மூர்த்தி, பொருளாளர் ஆர்.கணேஷ், உதவிச் செயலாளர் கே.என்.ராஜகோபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வரும் ஜன. 14-ம் தேதி மாலை 5 மணிக்கு மங்கல இசையுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

முக்கிய நிகழ்வான ஆராதனை விழா ஜன. 18-ம் தேதி நடைபெறும். அன்று காலை ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை இசைத்து தியாகராஜ சுவாமிக்கு இசையஞ்சலி செலுத்த உள்ளனர். அன்று இரவு தியாகராஜர் சிலை ஊர்வலம் மற்றும் ஆஞ்சநேய உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.