திருச்சி மாநகர் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த, மோகன் – பிரபாவதி தம்பதியினரின் மகளான, மாணவி சுகித்தா . ,இவர் செயின்ட் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது சகோதரருடன் இணைந்து ஏழைகளுக்கு ஏதேனும் உதவிகளை அவ்வப்போது செய்துவருகிறார்.
திருச்சி மாநகர் பகுதிகளில் சாலையோரங்களில் படுத்துறங்கும் நடைபாதைவாசிகள், குளிரால் அவதிப்படும் நிலையில் அவர்களுக்கு நள்ளிரவு நேரத்தில் போர்வை வழங்கி அவர்களின் குளிரைப்போக்கி வருகிறார் மாணவி சுகித்தா.
அரிஸ்டோ பாலம், ஜங்ஷன் ரயில்வே நிலையம், மத்திய பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் மற்றும் காவிரி பாலம் மற்றும் ஏனைய இடங்களில் படுத்துறங்கும் ஆதரவற்ற மற்றும் சாலையோரத்தில் வசிக்கும் 100 பேருக்கு கடும் பனியையும் பொருட்படுத்தாது நள்ளிரவில் தனது சகோதரருடன் சென்று… குளிரில் அவதிப்படும் மக்களுக்கு போர்வை வழங்கி சேவை செய்து வருகிறாா். அயர்ந்து தூங்கி கொண்டிருப்பவர்களுக்கு போர்வையை போர்த்திவிட்டு செல்கிறார்.
6வது ஆண்டாக தானும் தனது சகோதரரும் சேர்ந்து உண்டியலில் சேமித்த பணம் மற்றும் பெற்றோரிடம் வாங்கிய பணத்தைக் கொண்டு போர்வை வழங்கும் நற் செயலில் ஈடுபட்டுவருவதாகவும், இதுபோன்ற செயல்கள் தனக்கு மிகுந்த மனநிறைவை அளிப்பதாக மாணவி சுகித்தா பூரிப்புடன் தெரிவித்தார்.
இந்த உலகத்திலேயே மிகப்பெரிய சந்தோசம், முகம் தெரியாத யாரோஒருவருக்கு நாம் உதவி செய்வதுதான்… அதனால்தான் என்னவோ தம்மால் முடிந்த வரையிலும் தனது குடும்பத்தார் உதவியுடன் பலருக்கும் உதவிக்கரம் நீட்டிவரும் பள்ளி மாணவி சுகித்தாவின் சேவைகள் என்றும் தொடர நாமும் வாழ்த்துவோம்.
தமிழர்களின் பாரம்பரிய கலையான, சிலம்பத்தில் பல்வேறு உலக சாதனைகள் மற்றும் கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தியவர் சுகித்தா. தமிழக அரசன் சிறந்த பெண் குழந்தைகளுக்கான மாநில அரசின் 2024 விருதினை, முதல்வர் ஸ்டாலின் கைகளால் பெற்றவரும் பல்வேறு உலக சாதனைகளுக்கு சொந்தக்காரருமான சுகித்தாவின் சேவையை ஒவ்வொருவரும் பாராட்டி வருகிறார்கள். வரும் குடியரசு தின விழாவில் சுகித்தாவின் சேவையை அரசு பாராட்டி கவுரவிக்க வேண்டும் என திருச்சி மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.