அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு வெளிப்படையாகவே ஆதரவு அளித்த எலான் மஸ்க், அவரது பிரசாரத்திற்கு உதவ சுமார் 2,000 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் செலவிட்டார்.
மேலும், பல மேடைகளில் டிரம்பிக்கு ஆதரவாக எலான் மஸ்க் பரப்புரையும் மேற்கொண்டார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் அமைச்சரவையில் எலான் மாஸ்க்கிற்கு இடம் கொடுக்கப்படும் என டிரம்ப் அறிவித்து இருந்த நிலையில், தேர்தல் வெற்றிக்கு பிறகு தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு அமெரிக்கா அரசின் திறன் துறையின் தலைமை பதவியை கொடுத்தார். அடுத்த அதிபராகும் டிரம்பின் புதிய நிர்வாகத்தில் மஸ்க்கிற்கு அளவுக்கு அதிகமான இடம் கொடுக்கப்படுவதாக ஜனநாயக கட்சியினர் குற்றச்சாட்டினர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் பதவியை எலான் மஸ்க்கிற்கு விட்டுக்கொடுக்க உள்ளதாக வெளியான தகவலை டிரம்ப் முற்றிலுமாக மறுத்துள்ளார். அரிசோனா மாகாணத்தில் நடைபெற்ற குடியரசு கட்சி மாநாட்டில் பேசிய அவர் எலான் மஸ்க் அமெரிக்காவில் பிறக்கவில்லை என்றும், அதனால் அவர் கண்டிப்பாக அதிபராக முடியாது என்றும் தெரிவித்தார். சமூக வலைத்தளங்களில் பொய் செய்தி பரப்பப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். அமெரிக்காவின் அரசு அமைப்பு சட்டப்படி அந்நாட்டில் பிறந்தவர்கள் மட்டுமே அதிபராக முடியும். எலான் மஸ்க் தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர் என்பதால் அமெரிக்க அதிபராக முடியாது என டிரம்ப் கூறியுள்ளார்.