தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் செருவாவிடுதி தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜா (38) விவசாயி. இவர் திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில் கூறி இருப்பதாவது.. “எனக்கு சொந்தமான செருவாவிடுதி வடக்கு கிராமத்தில் உள்ள நிலத்தில் நெல் பயிரிட்டு இருந்தேன். அப்பயிருக்கு காப்பீடும் செய்துள்ளேன். சுமார் மூன்று மாத காலத்திற்கு முன்பு சுமார் 70 சென்ட் நிலத்தில் நெல் பயிர் செய்து, இதுவரை கிட்டத்தட்ட 20 ஆயிரம் ரூபாய் செலவும் செய்துள்ளேன். கடந்த ஒரு வார காலத்திற்கு முன்பு கதிர் வர ஆரம்பித்தது.
இந்நிலையில், எங்கள் ஊரைச் சேர்ந்த அருணாசலம் மனைவி மலர் என்பவர், அவருடைய அண்ணன் எம்ஜிஆர் என்பவரிடமிருந்து நான் விவசாயம் செய்து வரும் நிலத்தை கடந்த 2013 இல் கிரையம் வாங்கியதில் இருந்து தொடர்ந்து என்னிடம் பிரச்சினை செய்து வருகிறார். அவரது அண்ணன் அவருக்கு சொத்தில் பங்கு தரவில்லை என என்னிடம் சொன்னார். நீங்கள் இதுகுறித்து உங்கள் அண்ணனிடம் தான் பேச வேண்டும். நான் கிரையம் வாங்கிய நிலத்தில் தொந்தரவு செய்ய வேண்டாம் என பலமுறை சொல்லி விட்டேன்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி அன்று எனது பயிரைப் பட்டுப்போகச் செய்யும் வகையில், ஏதோ விஷமருந்தை பயிரில் தெளித்துள்ளார். தற்போது அனைத்து பயிர்களும் கருகிவிட்டது. எனவே, மலர் தூண்டுதலின் பேரில் அவருடைய மகன் போத்திராஜன். அவருடைய அக்கா மகன் ரவி ஆகியோர் விஷமருந்தை தெளித்து என்னுடைய வேளாண்மையை கெடுத்து விட்டனர்.
இந்த பயிர் மூலம் கிடைக்கும் வருமானத்தை நம்பி, எனது உழைப்பையும், பெரும் பொருளாதாரத்தையும் செலவழித்து விட்டேன். அதனை நம்பி இருந்த நானும், எனது குடும்பமும் மீள முடியாத துயரத்தில் உள்ளோம். இதுபோன்ற கொடுமையான செயலைச் செய்த மேற்படி மூன்று நபர்களின் மீதும் நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு கடும் தண்டனையும் எனக்கு உரிய நிவாரணமும் உடனடியாக பெற்று தர வேண்டும்” என அந்த மனுவில் கூறியுள்ளார்.
இதுகுறித்து விவசாயி மகாராஜா கூறுகையில், காவல்துறையில் புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
வேளாண் துறை, கிராம நிர்வாக அலுவலரிடமும் புகார் அளித்துள்ளேன்.
பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியருக்கும் வாட்ஸ் அப் மூலம் மனு அனுப்பி உள்ளேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும். எனக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்.
இதுகுறித்து, காவல்துறை தரப்பில் விசாரித்த போது புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இருதரப்பையும் அழைத்து விசாரித்து வருகிறோம். மேலும் வருவாய்த்துறை, வேளாண் துறை அலுவலர்கள் ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கை அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படும்” என்றனர்.