Skip to content
Home » வன்முறையை தூண்டும் வகையில் பேசுகிறார்.. அண்ணாமலை மீது போலீசில் புகார்

வன்முறையை தூண்டும் வகையில் பேசுகிறார்.. அண்ணாமலை மீது போலீசில் புகார்

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தன்னை ஒரு தொண்டர் அழைத்து `கொலை செய்யப் போகிறேன். ஜாமீனில் எடுத்து விடுங்கள்` என்று கூறினார். எனவே `கட்சிக்கு எழுச்சி வந்துவிட்டது’ என கோவை கூட்டத்தில் பேசியுள்ளார். சில நாட்களுக்கு முன்புதான் திருநெல்வேலி நீதிமன்றம் அருகே கொலை சம்பவம் அரங்கேறியது. வன்முறையைத் தூண்டி, சமூகத்தில் அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் அண்ணாமலை பேசுகிறார். ஏற்கெனவே அண்ணாமலை மீது 2 புகார் அனுப்பியும், காவல் துறை வழக்கு பதிவு செய்யவில்லை. இது தொடர்பாக சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். சென்னை உயர் நீதிமன்றத்திலும் ஒரு வழக்கு உள்ளது. அந்த வழக்கில் அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார். அண்ணாமலை, பெரும்பான்மை சமூக மக்களை, சிறுபான்மை மக்களுக்கு எதிராகத் தூண்டிவிடும் வேலையை செய்கிறார். எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.