நெல்லை அருகே உள்ள கீழநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் மாயாண்டி, இவர் ஒரு வழக்கு விசாரணையில் ஆஜராக பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு இன்று காலை வந்தார். நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி வருகைக்காக காத்திருந்தபோது திடீரென 4 பேர் கொண்ட கும்பல் மாயாண்டியை சுற்றி வளைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாயாண்டி உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக கும்பலிடம் இருந்து தப்பித்து நீதிமன்ற வளாகத்தில் ஓடினார். இருப்பினும் அந்த கும்பல் மாயாண்டியை துரத்தி சென்று வெட்டிக்கொலை செய்தது.
அப்போது அங்கு பாதுகாப்புக்காக இருந்த எஸ்.ஐ, கொலையாளிகளில் ஒருவரான ராமகிருஷ்ணன் என்பவரை பிடித்தார். மற்ற 3 பேர் காரில் தப்பினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் பெயர் சிவா, மனோராஜ், தங்கமகேஷ். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கிறார்கள். கொலையாளிகளிடம் இருந்து கார் மற்றும் ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.