முன்னாள் முதல்-அமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க நடுக்கடலிலும் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட ‘பேனா’ நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. இந்த பிரமாண்ட நினைவு சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டது.
இதில் மத்திய அரசின் முதற்கட்ட அனுமதி கிடைத்ததை தொடர்ந்து அடுத்த கட்டமாக பொதுமக்களின் கருத்தை கேட்க அரசு முடிவு செய்தது. இந்த நிலையில், பேனா நினைவு சின்னம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று காலை தொடங்கியது. இதில் பாஜக, ஆம் ஆத்மி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது தரப்பு கருத்தை முன்வைத்தனர். இதனை தொடர்ந்து பேனா நினைவுச் சின்னம் தொடர்பாக பொதுப்பணித்துறை தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதில், முன்னாள் முதல்-அமைச்சரின் பேனா நினைவுச் சின்னம் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஆழிப்பேரலை, புயல், நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர்களை முன்னறிவதற்கான உரிய கருவிகளுடன் அமையவுள்ளது. மும்பையில் அமைக்கப்பட்டு வரும் சத்ரபதி சிவாஜி திருவுருவச்சிலை கட்டமைப்பை முன்னுதாரணமாக வைத்து அமைக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.