திருச்சி, ஶ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும், இங்கு நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் சிறப்பு பெற்றது. 21 நாட்கள் இந்த விழா நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா வரும் 31ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து 10 நாட்கள் பகல் பத்து வைபவங்கள் நடைபெறும். ஜனவரி 10ம் தேதி அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். இதில் லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். பின்னர் 10 நாட்கள் இராப்பத்து நிகழ்ச்சி நடைபெறும்.
சிறப்பு வாய்ந்த இந்த வைகுண்ட ஏகாதசி விழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் இன்று (20.12.2024) ரங்கநாதர் கோவில் வளாகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.விழா ஏற்பாடுகளை பாதுகாப்புடன் சிறப்பாக செய்ய வேண்டும்.
பக்தர்களின் பாதுகாப்பு, குடிநீர், கழிவறைவசதி, போக்குவரத்து, பக்தர்களை நெருக்கடி இல்லாமல் ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பணிகளை செய்வது குறித்து கலெக்டர், அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
இந்த ஆய்வில் மாநகராட்சி ஆணையர் வே.சரவணன். மாநகர காவல் ஆணையர் காமினி , துணை ஆணையர்
செல்வகுமார், திருக்கோவில் இணை ஆணையர் மாரியப்பன், வருவாய் கோட்டாட்சியர் .சீனிவாசன், காவல்துறையினர், வருவாய்த் துறையினர், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர்கள், போக்குவரத்து துறை உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.