நாடாளுமன்றத்தில் நேற்று அமித்ஷாவை கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர். பாஜக எம்.பிக்கள் இதற்கு எதிர் போராட்டம் நடத்தினர். ஊர்வலமாக வந்து நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற எதிர்க்கட்சி எம்.பிக்களை பாஜகவினர் தடுக்க முயன்றதால் இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில் பாஜக எம்.பிக்கள் 2 பேர் காயமடைந்ததாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தங்களை ராகுல் தான் தள்ளிவிட்டார் என கூறினர். இது தொடர்பாக பாஜ எம்பிகள் ஹேமங் ஜோஷி, அனுராக் தாக்கூர், பன்சூரி ஸ்வராஜ் ஆகியோர் ராகுல்காந்தி மீது கொடுத்த புகார் அடிப்படையில் ராகுல் மீது 5 பிரிவுகளில் நாடாளுமன்ற போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பிஎன்எஸ் சட்டப்பிரிவு 117 (தன்னிச்சையாக கடுமையான காயத்தை ஏற்படுத்துதல்), 125 (உயிர் அல்லது பிறரின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்து), 131 (குற்றவியல் நடவடிக்கைக்காக சக்தியைப் பயன்படுத்துதல்), 351 (குற்றம் சார்ந்த மிரட்டல்), 3(5) (பொது நோக்கம்) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து, நாடாளுமன்ற வளாகத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை நேற்று விளக்கினர். ராகுல் காந்தி கூறுகையில், ‘‘நான் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றேன். ஆனால் பாஜ எம்பிக்கள் என்னை தடுத்து நிறுத்தினர். என்னை தள்ளிவிட்டு மிரட்டினர். என்னை மட்டுமல்ல, மல்லிகார்ஜூன கார்கேவையும் அவர்கள் தள்ளிவிட்டனர். ஆனால் இதை பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை.
நாடாளுமன்றத்திற்குள் நுழைய எங்களுக்கு உரிமை உள்ளது. அதை தடுக்க பாஜ எம்பிக்கள் முயன்றனர். பாஜ அரசிலயமைப்புக்கும் எதிரி, அம்பேத்கருக்கும் எதிரி என்ற உண்மையை நாங்கள் சொன்னது தான் பாஜ எம்பிக்களை கோபப்படுத்தி உள்ளது. இது அமித்ஷாவை காப்பாற்றும் முயற்சி’’ என்றார்.
மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில், ‘‘என்னையும் படியிலிருந்து கீழே தள்ளிவிட்டனர். நான் நிலைதடுமாறி படிக்கட்டில் அமர்ந்து கொண்டேன். இதில், எனது முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அமித்ஷா கூறியதை நாங்கள் திரித்து கூறுவதாக சொல்வதில் எந்த உண்மையும் இல்லை. வேண்டுமென்றால் அதற்கான ஆதாரத்தை பாஜ காட்டட்டும்’’ என்றார்.
நாடாளுமன்றத்தில் நடந்த களேபரத்தில் ராகுல் காந்தி மீது குற்றம்சாட்டியதன் மூலம் பாஜ எம்பிக்கள் பிரதாப் சந்திர சாரங்கி, முகேஷ் ராஜ்புத், பாங்கோன் கொன்யாக் ஆகியோர் கவனம் பெற்றுள்ளனர். இதில் 69 வயதாகும் பி.சி.சாரங்கி ஒடிசாவில் உள்ள பாலசோர் தொகுதி எம்பி ஆவார்.
முகேஷ் ராஜ்புத் (55), உத்தரபிரதேசத்தில் உள்ள பரூகாபாத் தொகுதியில் இருந்து மூன்று முறை எம்பியாக வெற்றி பெற்றவர். இவர், 2014ல் சிட்டிங் எம்பியும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சல்மான் குர்ஷித்தை தோற்கடித்தார். பாங்கோன் கொன்யாக், நாகலாந்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் எம்பி ஆவார். மேலும், கடந்த ஆண்டு ஜூலை 25ம் தேதி, நாகலாந்தில் இருந்து மாநிலங்களவைக்கு தலைமை தாங்கும் முதல் எம்பி என்ற வரலாற்றையும் படைத்தார்.
காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தனது எக்ஸ் தள பதிவில், ‘‘ராகுல் காந்தியை நான் நன்கு அறிவேன். எம்பியாக இல்லாத ஒருவரைக் கூட ராகுல் கீழே தள்ளி விட மாட்டார். யாரிடமும் முரட்டுத்தனமாகவும் மூர்க்கத்தனமாகவும் நடந்து கொள்ளும் பழக்கம் இயற்கையிலேயே அவரிடம் கிடையாது’’ என கூறி உள்ளார்.
நாடாளுமன்ற தள்ளுமுள்ளுவில் தலையில் காயமடைந்ததாக கூறப்படும் பாஜ எம்பிக்கள் பிரதாப் சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் இருவரும் ஆர்எம்எல் மருத்துவமனையில் ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை பல்வேறு பாஜ தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர். பிரதமர் மோடி போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் பேட்டி அளித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ‘‘மகர் துவார் நுழைவாயில் பகுதியில் இத்தனை நாட்களாக நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். தினமும் காலை 10.30 மணி முதல் 11 மணி வரை அமைதியான முறையில் போராட்டம் நடக்கிறது. இன்று (நேற்று) முதல் முறையாக பாஜ எம்பிக்கள் போராட்டம் நடத்தி அனைவரும் அவைக்குள் செல்ல விடாமல் தடுத்துள்ளனர். பின்னர் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இப்போது அமித்ஷாவை காப்பாற்ற சதியை தொடங்கி உள்ளனர்.
என் கண் எதிரே, கார்கேவை தள்ளிவிட்டு கீழே விழ வைத்தனர். அவருக்கு காயம் ஏற்பட்டிருப்பது அவர்படும் வேதனை தெரிந்தது. அவருக்கு கால் உடைந்திருக்கும் என நினைத்தேன். ராகுல் காந்தி தள்ளிவிட்டதாக பொய்யை பரப்புகின்றனர். இது திட்டமிட்ட சதி. எங்களை தடுத்து நிறுத்துபவர்களுக்கு சவால் விடுகிறோம், ‘ஜெய் பீம்’ என சொல்லுங்கள் பார்க்கலாம். அவர்களால் ஏன் ஜெய் பீம் என சொல்ல முடியவில்லை?’’ என்றார்.