மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தலைமையில் எதிர்க்கட்சியினர் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரசை கண்டித்து பாஜகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எம்.பி.,க்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பா.ஜ., எம்.பி.,க்கள் பிரதாப் சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் ஆகியோருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக ராகுல் மீது பா.ஜ.,சார்பில் அனுராக் தாக்கூர், பன்சூரி சுவராஜ் உள்ளிட்டோர் டில்லி போலீசில் புகார் அளித்தனர். அதில், கொலை முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி இருந்தனர்.பதிலுக்கு காங்கிரஸ் சார்பிலும் போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், பா.ஜ.,வினர் அளித்த புகாரின் அடிப்படையில் ராகுல் மீது டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதிய சட்டமான பாரதிய நியான் சன்ஹீதாவின் கீழ், 115, 125, 131,351 மற்றும் 3(5) ஆகிய பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.