மகாராஷ்டிர தேர்தலில் சிவசேனா (உத்தவ் உத்தவ் அணி) தோல்வியடைந்ததற்கு இந்துத்துவா கொள்கைகளை கைவிட்டதே முக்கிய காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில் சிவசேனா நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே, மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். சட்டப்பேரவை தேர்தலுக்குப்பின், முதல்வர் பட்னாவிஸை, உத்தவ் தாக்கரே சந்திப்பது இதுவே முதல் முறை. அப்போது வீர சாவர்க்கருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்குவதற்கு ஏற்கெனவே விடுத்த கோரிக்கையை மத்திய அரசிடம் வலியுறுத்துமாறு உத்தவ் தாக்கரே கோரிக்கை மனு அளித்தார். அப்போது ஆதித்ய தாக்கரே உட்பட கட்சியின் மூத்த தலைவர்கள் உடன் இருந்தனர். அதன்பின் முதல்வர் பட்னாவிஸும், உத்தவ் தாக்கரேவும் சுமார் 15 நிமிடம் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
சபாநாயகர் ராகுல் நர்வேகரையும் உத்தவ் தாக்கரே சந்தித்து பேசினார். 20 எம்எல்ஏ.க்களுடன் மிகப் பெரிய எதிர்க்கட்சியாக இருக்கும் சிவசேனா (உத்தவ் அணிக்கு) எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.