Skip to content

சென்னை மெரினாவில் உணவுத்திருவிழா, நாளை தொடக்கம்

  • by Authour

சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் டிசம்பர். 20 முதல் 24 வரை மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா நடைபெற உள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தரமான, சத்தான, ஆரோக்கியமான, பாரம்பரிய உணவுகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களை அனைவரும் அறிந்திட வேண்டும் என்ற நோக்கத்துடனும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவுத் திருவிழா, 20.12.2024 முதல் 24.12.2024 வரை சென்னை, மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  இதனை தொடங்கி வைக்கிறார். உணவுத் திருவிழாவில், உயர்தர உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகளுக்கு இணையான உணவுகள் மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு வாய்ந்த சுவையும், தரமும் நிறைந்த கோவை கொங்கு மட்டன் பிரியாணி, கிருஷ்ணகிரி நோ ஆயில் நோ பாயில், கரூர் தோல் ரொட்டி , மட்டன் கிரேவி, நாமக்கல் பள்ளிப்பாளையம் சிக்கன், தருமபுரி ரவா கஜூர், நீலகிரி ராகி களி, அவரை குழம்பு, திருப்பூர் முட்டை ஊத்தாப்பம், காஞ்சிபுரம் கோவில் இட்லி, சிவகங்கை மட்டன் உப்புக்கறி, புதுக்கோட்டை சுக்குமல்லி காபி,

ராணிப்பேட்டை ஆற்காடு பிரியாணி, வேலூர் ராகி கொழுக்கட்டை, மதுரை கறி தோசை, விருதுநகர் கரண்டி ஆம்லெட், தஞ்சாவூர் பருப்பு உருண்டை குழம்பு, திருச்சி நவதானிய புட்டு, மயிலாடுதுறை இறால் வடை, நாகப்பட்டினம் மசாலா பணியாரம், கன்னியாகுமரி பழம் பொறி, சென்னை தயிர் பூரி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட உணவு வகைகளை, 65 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மகளிர் உடனடியாக சமைத்து, சுகாதாரமான முறையில் பரிமாறும் வகையில் 35 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. உடனடியாக சமைப்பதற்கும் மற்றும் உண்ணுவதற்கும் ஏற்ற (Ready to Eat) உணவு வகைகளான அரியலூர் வறுத்த முந்திரி, செங்கல்பட்டு நாட்டுச்சர்க்கரை எள்ளுருண்டை, சென்னை வேர்க்கடலை நெய் லட்டு,

கருப்பு கவுனி அரிசி லட்டு, கோவை பீட்ரூட் மால்ட் பொடி, கடலூர் சங்குப்பூ சர்பத், தருமபுரி குதிரைவாலி ரோஸ் லட்டு, திண்டுக்கல் காராபூந்தி, ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா, காஞ்சிபுரம் முட்டை மிட்டாய், சேலம் ஆட்டையாம்பட்டி முறுக்கு, கரூர் பாசிப்பருப்பு உருண்டை, கிருஷ்ணகிரி மசாலா தட்டுவடை, மதுரை தொத்தல், நாகப்பட்டினம் சுண்டைக்காய் வத்தல், நீலகிரி ஸ்ட்ராபெர்ரி ப்ளூபெர்ரி, ராமநாதபுரம் லோத்தல், தென்காசி தேன் நெல்லி, திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி உடன்குடி கருப்பட்டி, திருச்சி மணப்பாறை முறுக்கு, திருவண்ணாமலை சிமிலி உள்ளிட்ட 67 வகையான தயார் நிலை உணவுப் பொருட்களை, உணவுத் தரச் சான்றிதழ் (FSSAI) பெற்ற 24 குழுக்களைச் சேர்ந்த மகளிர் சுகாதாரமான முறையிலும்,

கலப்படம் ஏதுமின்றியும் தயாரித்து, தகுந்த முறையில் கட்டுமானம் (Packaging) செய்து விற்பனை செய்திட 6 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

துவக்க நாளான 20.12.2024 அன்று மட்டும் மாலை4 மணி முதல் இரவு 8.30 மணி நடைபெறும் உணவுத் திருவிழா, 21.12.2024 முதல் 24.12.2024 வரை மதியம் 12.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடைபெறும்.

உணவுத் திருவிழாவிற்கு வருகை தரும் பொதுமக்கள், லேடி விலிங்டன் கல்லூரி, சென்னைப் பல்கலைக் கழகம் மற்றும் ராணி மேரி கல்லூரி ஆகிய கல்லூரிகளின் வளாகங்களில் இலவசமாக வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலவச வாகன நிறுத்துமிடங்களில் தங்களின் வாகனங்களை நிறுத்தி விட்டு, உணவுத் திருவிழாவிற்கு வருகை தரும்படி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்  அழைப்பு விடுத்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *