Skip to content
Home » இதுவரை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்துள்ள 6 தமிழர்கள்

இதுவரை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்துள்ள 6 தமிழர்கள்

மத்திய அரசின் பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். 2019-ம் ஆண்டு அருண் ஜெட்லி மறைவுக்கு பிறகு நிதி மந்திரியாக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன் இதுவரை 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். நிர்மலா சீதாராமனுடன் இதுவரை 6 தமிழர்கள் சுதந்திர இந்தியாவில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்கள். சுதந்திரம் பெற்றதும் 1947-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி இந்தியாவின்  முதல் பட்ஜெட்டை தமிழரான ஆர்.கே.சண்முகம் செட்டியார் தாக்கல் செய்தார். கோவையை பூர்வீகமாக கொண்ட இவர்தான் இந்தியாவின் முதல் நிதி மந்திரி ஆவார்.

மத்திய மந்திரியாக பதவி வகித்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி 1957, 1958, 1964, 1965 ஆகிய 4 ஆண்டுகள் பட்ஜெட் தாக்கல் செய்து உள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர். அதே கல்லூரியில் பொருளியல் துறையில்பேராசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார்.

1975-ம் ஆண்டு முதல் 1977-ம் ஆண்டு வரை 3 முறை சி. சுப்பிரமணியம்,  இந்திராகாந்தி ஆட்சியில் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இவரது பூர்வீகம் பொள்ளாச்சி.

இந்திராகாந்தி மந்திரி சபையில் நிதி மந்திரியாக பதவி வகித்த ஆர்.வெங்கட்ராமன் 1980, 1981 ஆகிய வருடங்களில் 2 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். தஞ்சாவூரை பூர்வீகமாக கொண்ட இவர் 1950-ம் ஆண்டு முதல் எம்.பி.யாக பதவி வகித்தவர். தொழில் துறை மற்றும் பாதுகாப்பு துறை மந்திரியாகவும் பணியாற்றியவர். இந்தியாவின் 8-வது ஜனாதிபதியாக 1987-ம் ஆண்டு முதல் 1992-ம் ஆண்டு வரை பதவி வகித்தவர். இந்திய அரசியலில் இலங்கை சிக்கல், போபர்ஸ் ஊழல், ராஜீவ் படுகொலை, பங்கு சந்தை ஊழல் என நெருக்கடியான கால கட்டத்தில் 4 பிரதமர்களுடன் பணியாற்றியவர்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பாகிஸ்தானுக்கு சென்று வந்த முதல் ஜனாதிபதியும் இவர்தான். ப.சிதம்பரம் ப.சிதம்பரம் எம்.பி. 9 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து மத்திய நிதி மந்திரியாக பதவி வகித்தவர்களில் அதிக தடவை பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் ப.சிதம்பரம் மட்டுமே. இதுவரை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள 75 பட்ஜெட்டுகளில் 6 தமிழர்கள் 23 பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!