திருச்சி மாநகராட்சி 29வது வார்டுக்குட்பட்ட தென்னூர் அண்டகொண்டான், மீனாட்சி அம்மன் தோப்புப் பகுதியில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
மீனாட்சியம்மாள் என்பவர் அந்த சொத்துக்களை தனது குடும்ப உறவினர்கள் 10 பேருக்கு பிரித்துக் கொடுத்து உயில் எழுதி கொடுத்துள்ளார். அவரது மறைவுக்குப் பிறகு உயில்படி மீனாட்சியம்மாவின் உறவினர்கள் சொத்துக்களை அனுபவித்து வருகின்றனர். அதில் பலர் வாடகைக்கும் குடியிருக்கிறார்கள்.
அந்தக் குடியிருப்புக்கு செல்ல 3 அடி அகலம் 200 மீட்டர் நீள பாதை மட்டும் உள்ளது. ஆனால், குடியிருப்புக்கு தேவையான சாலை, கழிவுநீர் வடிகால் வசதிகள் கிடையாது. எனவே, இப்பகுதியில் குளிக்கும், துணி துவைக்கும் தண்ணீர் மற்றும் கழிவுநீர்பாதையில் வழிந்தோடுகிறது. எனவே, குடியிருப்புவாசிகள் தங்கள் பகுதிக்கு கழிவுநீர் வடிகால், சாலை வசதி வேண்டும் என மாவட்ட ஆட்சியர், மாநராட்சி மேயர் ஆகியோரிடம் மனு அளித்து வந்தனர்.
இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம் அங்கு சிறிய அளவிலான கழிவுநீர் வடிகால், சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டது. ஆனால், மீனாட்சியம்மாள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சாலை, கழிவுநீர் வடிகால் கட்டும் பணி நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, அங்கு குடியிருக்கும் 30க்கும் மேற்பட்டோர் தங்கள் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் மற்றும் சாலை வசதி கோரி திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,
நாங்கள் குடியிருக்கும் மீனாட்சி தோப்பில் போதிய கழிவுநீர் வடிகால், சாலை வசதியில்லாததால், பலரும் யானைக்கால் நோய் உள்ளிட்ட பல்வேறு நோயால் கடும் அவதியுற்று வருகின்றனர். அப்பகுதி முழுவதும் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே நிறுத்தப்பட்ட கழிவுநீர் வடிகால், சாலை கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றனர்.
மீனாட்சியம்மாள் குடும்ப உறுப்பினர்கள் 15 க்கும் மேற்பட்டோர் மெய்யப்பன் என்பவர் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மெய்யப்பன் கூறுகையில், சொத்துவரி, குடிநீர் வரி, மின்சார கட்டணம் அனைத்தும் செலுத்தி வருகிறோம். கழிவுநீர் வடிகால், சாக்கடை வசதிக்காக மாநகராட்சி வசம் நாங்கள் எந்த நிலத்தையும் இதுவரை ஒப்படைக்கவில்லை. ஆனால், எங்களுக்குச் சொந்தமான இடத்தில், எங்களது அனுமதியின்றி மாநகராட்சி நிர்வாகம் சாலை, கழிவுநீர் வடிகால் அமைப்பது போன்ற கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது தவறு. வாடகைக்கு குடியிருப்பவர்களை காலி செய்யச் சொல்லியும் அவர்கள் காலி செய்ய மறுக்கின்றனர். மாநகராட்சி கழிவுநீர் வடிகால், சாலை அமைத்தால் எதிர் காலத்தில் எங்களது நிலத்தை நாங்கள் விற்கவோ அல்லது வேறு ஏதேனும் கட்டுமானம் பணிகள் செய்யவோ இயலாது. தேவையற்ற பிரச்சினைகள் வரும் எனவே இந்த முடிவை மாநகராட்சி கைவிட வேண்டும் என்றனர்.
இதுகுறித்து அப்பகுதி வார்டு உறுப்பினர் (கவுன்சிலர்) கமால்முஸ்தபா கூறுகையில், மீனாட்சி தோப்பில் குடியிருக்கும் மக்கள், அடிப்படை வசதிகள் செய்துதர கேட்டதன் அடிப்படையில்தான், மாநகராட்சி சாலை, வடிகால் வசதி ஏற்படுத்தித்தர முன் வந்துள்ளது. ஆனால் சாலை அமைக்கக்கூடாது என்று போராடுகின்றனர். அதே பகுதியில் மின் கம்பம் பொருத்தப்பட்டுள்ளது. அதற்கு ஏன் அனுமதித்தார்கள்? என்பது புரியவில்லை என்றார்.