Skip to content
Home » நாக்கை பிளந்து டாட்டூ வரைந்தது எப்படி? சிறையில் ஹரிஹரனிடம் விசாரணை

நாக்கை பிளந்து டாட்டூ வரைந்தது எப்படி? சிறையில் ஹரிஹரனிடம் விசாரணை

  • by Authour

திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் (25). இவர், மேலசிந்தாமணி பஜார் பகுதியில் ‘ஏலியன்’ என்ற பெயரில் டாட்டூ சென்டரை நடத்தி  வந்தார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஹரிஹரன் வித்தியாசமாக தோன்ற வேண்டும் என்பதற்காக  மும்பைக்கு சென்று சுமார் ரூ.2 லட்சம் வரை செலவு செய்து, தனது கண்களில் பச்சை குத்தி கொண்டார்.

அறுவை சிகிச்சை மூலம் நாக்கையும் இரண்டாக பிளந்து கொண்டார். அறுவை சிகிச்சை செய்வது குறித்த பயிற்சியை அவர் மும்பையில் கற்றுக் கொண்டதாக தெரிகிறது. தொடர்ந்து, திருச்சி வந்த ஹரிஹரன், திருவெறும்பூர் கூத்தைப்பாரை வடக்கு தெருவை சேர்ந்த ஜெயராமன்(24) என்பவரை தனது டாட்டூ கடைக்கு அழைத்து கடந்த 9ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் ஜெயராமனின் நாக்கை இரண்டாக பிளந்தார். இது தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் ஹரிஹரன் வெளியிட்டார். இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து, ஹரிஹரன்,  ஜெயராமன் ஆகியோரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘சாதாரண முறையில் டாட்டூ வரைந்தால் எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் இல்லை. தொடர்ந்து, வித்தியாசமான முறையில் டாட்டூ வரைய வேண்டும் என்பதற்காக ஹரிஹரன் மும்பை சென்று, அங்கு நாக்கை இரண்டாக பிளக்கும் ஆபரேஷன் செய்வது எப்படி என்பது குறித்து பயிற்சி பெற்றுள்ளார். திருச்சியில் இதுவரையிலும் 4 பேருக்கு நாக்கை இரண்டாக பிளந்து அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

முக்கியமாக, கைகளில் உருவ படங்களை வரைவது, வயிற்று பகுதியில் வித்தியாசமான முறையில் டாட்டூ வரைவது, அந்தரங்க பகுதியில் ஆபாசமாகவும், ஆபாச சைகை காட்டும் வகையிலும் டாட்டூ வரைந்துள்னார். இவ்வாறு வரையப்படும் டாட்டூகளுக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கட்டணம் வசூலித்துள்ளார். இதன் மூலம் மாதம் ரூ.4 லட்சம் வரை சம்பாதித்துள்ளார்’ என்றனர்.

கைது செய்யப்பட்டு கடந்த 2 நாட்களாக சிறையில் உள்ள ஹரிஹரனின் மிக ஆபத்தான வகையில் மருத்துவ உபகரணங்களை பயன்படுத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் பயன்படுத்திய மயக்க மருந்துகள், மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்க கூடிய மருந்துகளாகும்.

அவையெல்லாம் இவருக்கு எவ்வாறு கிடைத்தது எனவும் நாக்கை வெட்ட கூடிய உபரணங்களெல்லாம் எப்படி கிடைத்தது எனவும் இவருக்கு நாக்கை வெட்ட பயிற்சி கொடுத்தது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஹரிஹரனிடம் சிறைக்கே சென்று மருத்துவக்குழுவினர் விசாரணை மேற் கொண்டனர். அப்போது ஹரிஹரன்  கூறிய தகவல்களை அதிகாரிகள்  பதிவு செய்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!