திருப்பூர் மாவட்டத்தில் பனியன் மற்றும் உள்ளாடை உற்பத்தி தொழில் அதிக அளவில் நடந்து வருகிறது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பல லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இங்கு வேலை செய்து வருகிறார்கள். இதை சார்ந்து பல துணை தொழில்களும் இங்கு வளர்ந்து உள்ளது.இந்த நிலையில் வாடகை கட்டிடத்தில் இயங்கும் கடைகளுக்கு மத்திய அரசு 18% ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதால் பெரும்பாலான வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.அத்துடன் மாநில அரசு சொத்து வரியும் உயர்த்தி உள்ளது. இவற்றை கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் இன்று வியாபாரிகள் கருப்பு கொடி ஏற்றி, கடையடைப்பு போராட்டம் நடத்துகிறார்கள். சுமார் 1 லட்சம் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது. இதனால் இன்று ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.வியாபாரிகள் கடையடைப்பு காரணமாக திருப்பூர் மாநகரம் இன்று மக்கள் நடமாட்டம், பரபரப்பு இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.