கிருஷ்ணராயபுரம் அருகே மேட்டு மகாதானபுரத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ரவுடியின் சடலம் மீட்பு. டிஎஸ்பி தலைமையில் 5 தனி படைகள் அமைக்கப்பட்டு கொலை குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மேட்டு மகாதானபுரத்தில் கட்டளை மேட்டு வாய்க்கால் கரையோரம் இன்று தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேற்கொண்டு சம்பவ இடத்தில் குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் மற்றும் லாலாபேட்டை போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் மோப்ப நாய் லக்கி வரவழைக்கப்பட்டது. மோப்பம் பிடித்த நாய் சிறிது தூரம் சென்று நின்று விட்டது.
நாய் நின்ற இடத்தின் அருகே இரு வாய்க்கால்களை இணைப்பதற்கான குமுளி உள்ளது. இதனால் குமுளியில் அவரது தலை வீசப்பட்டுள்ளதா என்பது குறித்து கண்டறிய முசிறி தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டனர்.
விசாரணையில், இறந்தவர் அரவக்குறிச்சியை சேர்ந்த பிரபல ரவுடி காளிதாஸ் (37) என்றும், அவர் மீது கரூர் மற்றும் வெளி மாவட்டங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கொலைக்கான காரணம் குறித்தும் கொலையாளிகள் யார் என்பது குறித்தும் போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா வும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.
கொலையாளிகளை பிடிக்க குளித்தலை துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் 5 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளது.