திருவண்ணாமலையில் கடந்த 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத பெய்த மழையால் தீப மலையில் மண் சரிவு ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்ளிட்ட 7 பேர் மண்ணில் புதையுண்டு உ நாட்களுக்குப் பிறகு தேசிய பேரிடர் மீட்பு படையினரால் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த நிலையில் தீபத் திருவிழா தினமான டிசம்பர் 13 ஆம் தேதி பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலை மீது ஏற தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகமும் பக்தர்களுக்கு அனுமதி மறுத்த நிலையில் குறைந்த எண்ணிக்கையில் தீபம் ஏற்றும் முறைதாரர்கள் மலை மீது ஏறி தீபம் ஏற்றவும் அனுமதி அளித்தனர். தொடர்ந்து பலத்த கண்காணிப்புக்கு பிறகு தீபம் ஏற்றும் முறை தாளர்கள் மலை மீது ஏறி தீபம் ஏற்றிய நிலையில் தொடர்ந்து 11 நாட்களும் அண்ணாமலையார் மலை உச்சியில் இருந்து ஜோதி சுடராய் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
இந்த நிலையில் கடந்த 14 ஆம் தேதி ஆந்திர மாநிலம் விஜயவாடா எஸ்.என்.புரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஸ்வர ராவ் மனைவி அன்னபூரணா இரவு 07:30 மணிக்கு தடையையும் மீறி தீபமலை மீது ஏறி உள்ளார். அவ்வாறு மலை மீது ஏறிய அன்னபூரணாவுக்கு திரும்ப வர வழி தெரியாததால் மலைக்கு பின்புறமாக சென்ற அவருக்கு கீழே இறங்க வழி தெரியாமல் கடந்த இரண்டு தினங்களாக மலையிலேயே இரவு, பகலாக தவித்தும் வந்துள்ளார். கையில் எடுத்துச் சென்ற தண்ணீரை மட்டும் பருகி வந்த நிலையில் 14 ஆம் தேதி இரவு மற்றும் 15ஆம் தேதி இரவு ஆகிய இரண்டு இரவு முழுக்க மலை மீது வழி தெரியாமல் தவித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் மலைமீது பெண் ஒருவர் தவித்து வருவதாக நகர காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததின் பெயரில் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் வனத்துறையினர் வன பாதுகாப்பு குழுவினர் அனைவரும் ஒன்றிணைந்து தீப மலை மீது ஆங்காங்கே தேடி வந்த நிலையில் மழைக்குப் பின்புறம் சென்றதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் மலையின் மீதுள்ள இரண்டு பள்ளத்தாக்குகளை கடந்து சென்ற வனக்காப்பாளர் ராஜேஷ் புதருக்குள் இருந்த விஜயவாடாவை சேர்ந்த அன்னபூர்ணாவை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து இரண்டு தினங்களாக உணவில்லாமல் தவித்து வந்த அவரால் கீழே இறங்க முடியாது இருந்த சூழலில் முதுகில் வனக்காப்பாளர் ராஜேஷ் மலையிலிருந்து பத்திரமாக மீட்டு கீழே 5 மணி நேரத்திற்கு பிறகு கொண்டு வந்தார்.
தொடர்ந்து அவருக்கு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மலையேற பக்தர்களுக்கு அனுமதி முற்றிலுமாக மறுக்கப்பட்ட நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த ஒரு பெண் தனியாக மலை மீது ஏறி கடந்த இரண்டு நாட்களாக தவித்து வந்தது திருவண்ணாமலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.