மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை புலி சிங்கபால் குரங்கு உள்ளிட்ட அரியவகை வனவிலங்குகள் உள்ளன இந்த விலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக வனத்தை விட்டு வெளியேறி பொதுமக்கள் பயணிக்கும் சாலைகளில் உலா வருகிறது
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக சில்லிக் கொம்பன் என்ற ஒற்றை காட்டு யானை ஆழியார் நவமலை மற்றும் வால்பாறை சாலை உள்ளிட்ட பகுதிகளில் உலா வருகிறது.
இதனால் இந்தப் பகுதிகளில் பயணிக்கும் பொதுமக்கள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். மாலை நேரங்களில் உலா வந்த காட்டு யானை தற்போது பகல் நேரங்களிலும் ஆழியார் கவியருவி அருகே உலா வருவதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மற்றும் மலைவாழ் குடியிருப்பை சேர்ந்த மக்கள் பீதியில் உள்ளனர். ஒற்றை யானையின் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் பொதுமக்கள் வால்பாறை சாலையை கடக்கும் பொழுது கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.